TamilsGuide

நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம் எனவும், அவ்வாறு ஏற்பட்டால் அதற்கு உரிய தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்  இதனைக்  குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரிய அரசியலில் ஈடுபட்டால், நாட்டில் மூன்றாவது உள்நாட்டுப் போர் இடம்பெறுவதை எவராலும் தடுக்க முடியாது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் புதிய பொருளாதார மாற்ற சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், சிலர் மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை முன்வைப்பது வருந்தத்தக்கதாகும்.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இந்த நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான முக்கியமான தேர்தலாக அமையும் தற்போது அரசியல் கட்சிகள் பாரம்பரிய முறையில் அரசியல் பிரச்சாரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நம் நாட்டின் வரலாற்றில், பல கிளர்ச்சிகளும் உள்நாட்டுப் போர்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆட்சிக்கு எதிராக உள்நாட்டில் போராட்டமும் இடம்பெற்றது. எனவே, மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி மீண்டும் மூன்றாவது உள்நாட்டு யுத்தம் போன்ற நிலைமையை உருவாக்குவார்களா? இல்லாவிட்டால், செப்டம்பர் 21ஆம் திகதி நாட்டில் இவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு தமது வாக்குகளைப் பயன்படுத்துவார்களா என்ற கேள்வியை இலங்கைப் பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த காலத்தில் நாடு வங்குரோத்து அடைந்த போது , நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றார்.

2022 ஆம் ஆண்டு ஜீலை 21 ம் திகதி நாடாளுமன்றத்தின் 8வது நிறைவேற்றுத் ஜனாதிபதியானதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்” இவ்வாறு வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment