TamilsGuide

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையினை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியினரின் ஏற்பாட்டில் இன்று ஹட்டனில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,700 ரூபாவை வழங்குமாறு, பெருந்தோட்ட கம்பனிகளை வலியுறுத்தி, குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்பட்டமை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கறுப்பு நிற ஆடைகளை அணிந்துவாறு, தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

ஹட்டன் நகர பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், பேரணியாக ஹட்டன் பிரதான வீதியினூடாக மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்தது.

போராட்டத்திற்கு ஆதரவ வழங்கும் வகையில் ஹட்டனில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு, கலகத் தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டிருந்ததுடன , நீர் தாரை பிரயோக வாகனமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

மேலும் பெருமளவிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக இன்று நண்பகல்வரை ஹட்டன் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment