TamilsGuide

வங்காளதேசத்தில் 10 நாளுக்குப் பிறகு மீண்டும் இணைய சேவை

வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரி பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதன்பின் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை நாடு முழுவதும் பரவியது.

மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். டி.வி. நிலையங்களுக்கு தீ வைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு என பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர். இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டது.

இதற்கிடையே, வன்முறைக்கு காரணமாக வேலைவாய்ப்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து, அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டே இருந்தது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக முடக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது என தகவல் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment