TamilsGuide

பொலிஸ் மா அதிபா் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம் – பிரதமா் தினேஸ்

தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவர், பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார்.

இந்தநிலையில், கடந்த 25 ஆம் திகதி உயர்நீதிமன்றமானது, பொலிஸ் மா அதிபருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த அமர்வு நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நவம்பர் மாதம் என்பது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒருமாதம் கடந்து இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
புதிய ஜனாதிபதி பதவியேற்கும் காலத்தில்தான் இந்த வழக்கு விசாரணை அடுத்ததாக இடம்பெறும்.

பொலிஸ் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டிய இந்தத் தருணத்தில் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்றுக்குள்ளும் தற்போது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 4 ஆவது உறுப்புரையில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக நீதியான தேர்தலை நடத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உயர்நீதிமன்றமானது இந்தத் தடையை விதிக்கும் முன்னர், தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தைக் கேட்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அரசமைப்பின் 44 (அ) 2 ஆம் உறுப்புறுமையின் கீழ், 14 நாட்களுக்குள் பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவானது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசமைப்புச் சபையின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

இதற்காக தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

இப்போதும் பொலிஸ் மா அதிபராக இடைக்கால தடை விதிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரே இருக்கிறார் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
 

Leave a comment

Comment