TamilsGuide

சம்பள முரண்பாட்டைத் தீா்ப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் – அமைச்சர் பிரசன்ன

அரச அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் போது, அது நேரடியாக மக்களை பாதிப்பதால் இந்த நாட்டுக்கு நிலையான அரசாங்கம் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை நடத்தலாம் எனவும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட்டு தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாட்டில் இருந்த நிலைமையை நாம் அனைவரும் புரிந்து கொண்டதாகவும் மக்கள் வீதிகளில் எரிபொருள் வரிசை மற்றும் எரிவாயு வரிசையில் நின்று கொண்டிருந்ததுடன், நிதி பிரச்சினைகளால் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வேறு சில நாடுகளின் ஊழியர்களின் சம்பளம் கூட குறைக்கப்பட்ட போதிலும் அரசு அதைச் செய்யவில்லை எனவும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், இந்த சம்பளப் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி குழு நியமிக்கப்பட்ட போதிலும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களைச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த சம்பள முரண்பாட்டை 2025 ஆம் ஆண்டின் ஜனவரிக்குள் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் அறிக்கை வழங்குமாறு கூறியுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment