TamilsGuide

சிவாஜி கணேசன் 

நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் அன்றும் இன்றும் என்றும் அவருக்கான இடம் நிலைத்திருக்கும். இன்று அவரது நினைவு நாள்

நடிகர் சிவாஜி கணேசன் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

மேடை நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசனின் முதல் நாடகத்தின் பெயர் 'இராமாயணம்'. இதில் சீதை வேடத்தில் நடித்தார் சிவாஜி.

'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' மூலம் கணேச மூர்த்தி, 'சிவாஜி' கணேசனாக மாறிய பிறகு அவரது முதல் திரைப்படமான 'பராசக்தி' 1952-ல் வெளியானது. கலைஞர் வசனத்தில் நீதிமன்ற கூண்டில் நின்று சிவாஜி பேசும் வசனங்கள் அறிமுக படத்திலேயே அவருக்கான முத்திரையாக அமைந்தன.

'பராசக்தி', 'பாசமலர்', 'கர்ணன்', 'தில்லானா மோகனாம்பாள்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', 'மனோகரா' என இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இவரது நடிப்புத் திறனுக்கான சான்று. அதிலும், சமீபத்தில் 'கர்ணன்' படம் வெளிவந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலாக திரையரங்குகளில் மறுவெளியீடு செய்திருந்த போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக 1962-ம் வருடம் சிவாஜி கணேசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இருபெரும் துருவங்களாக கோலோச்சி கொண்டிருந்த எம்.ஜி.ஆர் - சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'.

எகிப்து நாட்டின் அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வந்த போது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான்.

யானை மீது அதிகம் பிரியம் கொண்ட சிவாஜி கணேசன் திருப்பதி, திருவானைக்காவல், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில்களுக்கு யானைகளை கொடுத்துள்ளார்.

திரைத்துறையில் இருந்து அரசியல் களத்தில் நடிகர்கள் கோலோச்சி கொண்டிருந்த காலக்கட்டத்தில் சிவாஜி கணேசனும் அரசியல் களத்தில் இறங்க தவறவில்லை. 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை தொடங்கினார். ஆனால், சினிமா களத்தில் வெற்றி கண்டவருக்கு அரசியல் களம் கைகொடுக்கவில்லை.

கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி.

பெருந்தலைவர் காமராஜர் மீது அதீத பிரியம் கொண்டவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் இருந்து 'இராமயண'த்தின் சீதை, 'மகாபாரத' கர்ணன் என பல வேடங்களை ஏற்று நடித்துள்ளார். ஆனால், சிவாஜி நடிக்க விரும்பிய கதாப்பாத்திரம் எது தெரியுமா? இவருக்கு 'சிவாஜி' என்ற பெயர் கொடுத்த தந்தை பெரியாருடைய வேடம்தான் அது. ஆனால், அது கடைசி வரை நடக்கவில்லை.

சென்னையில் நடிகர் சிவாஜியின் பெயரில் சாலை, அவருக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை உண்டு. நடிகர் திலகத்திற்கு நமது இதயப்பூர்வமான அஞ்சலிகள்.

Muthammal Rammohan

Leave a comment

Comment