TamilsGuide

எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பு உதயமாக வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும் என்பதுடன், எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும். எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பு உதயமாக வேண்டும்.

தமிழ்ப்பேசும் மக்கள் வேண்டுவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான 13வது திருத்தச் சட்டத்தை அல்ல. எமக்கு சர்வதேசச் சட்டத்தின் கீழ் தரப்பட்டிருக்கும் சுயநிர்ணய உரிமையையே நாங்கள் கேட்கின்றோம். தமிழ்ப் பொது வேட்பாளர் இந்தக் கருத்தையே தமிழ்ப்பேசும் மக்களிடையே முன்னிறுத்த இருக்கின்றார்.

வடகிழக்கில் ஐக்கிய நாடுகள் மக்கள் தீர்ப்பைக் கோரி தேர்தல் நடத்தட்டும். தமிழ்ப்பேசும் மக்கள் எதனைக் கோருகின்றார்களோ அதனை வழங்க ஐக்கிய நாடுகள் முன்வரவேண்டும் என்ற கருத்தை சர்வதேசத்தின் முன் முன்னிலைப்படுத்தவே தமிழ் பொது வேட்பாளர் காத்து நிற்கின்றார்.

13ஐத் தருவதால் எமது மக்களுக்கு விடிவு காலம் ஏற்படாது. ஏற்கனவே 13ன் கீழுள்ள பல அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டுள்ளன.

இப்போது இருப்பது வெறும் கோதே! மேல்த்தோலே! அதிலும், தரப்பட்டிருக்கும் மிக சொற்ப பொலிஸ் அதிகாரங்களைக்கூட வழங்க முடியாது என்று ஒரு வேட்பாளர் கூறியுள்ளார்.

நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று போட்டியிடவில்லை. எமது தனித்துவத்தை உலகறியச் செய்யவும் எமது ஜனநாயக உரித்தை ஐக்கிய நாடுகள் மூலம் பரீட்சித்துப் பார்க்க ஒரு வேண்டுதல் மேடையாக இத்தேர்தலைப் பாவிக்கவுமே நாம் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்த உத்தேசித்துள்ளோம்.

நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்த இருக்கின்றோம் என்றவுடன் மூன்று முக்கிய சிங்கள வேட்பாளர்களும் தமது சேனை பரிவாரங்களுடனும் படைகளுடனும் இங்கு வந்து 13ஐத் தருகின்றோம் என்று சொல்லிச் சென்றுள்ளார்கள்” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment