TamilsGuide

நிபந்தனைகளின்றி நாட்டைப் பொறுப்பேற்றவா் ஜனாதிபதி – அமைச்சர் ஜகத்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித நிபந்தனையுமின்றி நாட்டைக் கைப்பற்றி மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க முன்வந்தார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தொிவித்தாா்.

குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று  இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்வில் உரையாற்றும் போதே அவா் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டிலும் பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கிக்கொண்டதால் உரத் தட்டுப்பாடு, பதிநான்கு மணி நேரம் மின்வெட்டு, எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதிக்கு வந்தனர்.

அதன் போது ‘அரகலய’ என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகள் சிலரால் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். ஆளும் கட்சியாகவிருந்த பொதுஜன பெரமுன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது.

சவாலை ஏற்றுக்கொள்ள சஜித் பிரேமதாச முன்வரவில்லை. நாடாளுமன்ற குழுவினர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து நிர்வாகத்தை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் நாட்டைக் பொறுப்பேற்க முடியாது என நிபந்தனை முன்வைத்தனர்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க எவ்வித நிபந்தனையுமின்றி நாட்டைக் கைப்பற்றி மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க முன்வந்தார்.

இன்று நாட்டை பொருளாதார ரீதியாக மீளக் கட்டியெழுப்ப புலம்பெயர் தொழிலாளர்களான உங்களது பங்களிப்பு மிக அவசியமானதாகும்.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment