TamilsGuide

காதில் பேண்டேஜ் உடன் உலா வரும் டிரம்ப் ஆதரவாளர்கள்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடந்த 13-ந்தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தாமஸ் மேத்யூ என்ற இளைஞர் டிரம்பை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு தோட்டா டிரம்பின் வலது காதை உரசி சென்றது. இதில் அவரது காதின் மேல் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. துப்பாக்கிச்சூட்டில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், பாதுகாப்பு படையினரால் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக வலது காதில் 'பேண்டேஜ்' போடப்பட்டிருந்தார். 'பேண்டேஜ்' உடன் அவர் மாநாட்டில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

இந்த நிலையில் மாநாட்டின் நிறைவையொட்டி நேற்று முன்தினம் டிரம்ப் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையை கேட்பதற்காக அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அவர்களில் பலர் வினோதமான முறையில் டிரம்புக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக டிரம்ப் தனது வலது காதில் 'பேண்டேஜ்' போட்டிருந்த நிலையில், அவரின் ஆதரவாளர்கள் பலரும் தங்களின் வலது காதில் 'பேண்டேஜ்' போட்டுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்றனர்.

படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய டிரம்ப் உடனான ஒற்றுமையின் அடையாளமாகவும், நாங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அவருக்கு தெரியப்படுத்துவதற்காகவும் காதில் 'பேண்டேஜ்' அணிந்துள்ளதாக டிரம்பின் ஆதரவாளர்கள் கூறினர். 
 

Leave a comment

Comment