TamilsGuide

ஆப்கானிஸ்தானில் கனமழையால் 35 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை இடியுடன் கூடிய பெய்த பலத்த மழையால் ஜலாலாபாத் மற்றும் நங்கர்ஹர் மாகாணத்தில் மரங்கள், சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 230 பேர் படுகாயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நங்கர்ஹார் பிராந்திய மருத்துவமனை மற்றும் பாத்திமா-துல்-சஹ்ரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் உடல்களும் இதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டன.

இதுகுறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். இஸ்லாமிய எமிரேட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவார்கள்," என்றார்.

கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். மேலும் விவசாய நிலங்கள் சேதமாயின. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இயற்கை பேரிடர் சம்பவங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment