• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உதயமாகிறதா புதிய பனிப் போர்?

உக்ரைன் மோதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், அது ஐரோப்பியா தழுவிய போராக வெடிக்குமா என்ற அச்சம் உருவாகி வருகிறது. கள முனையில் ரஸ்யப் படைகள் மெதுமெதுவாக முன்னேறி வரும் நிலையில் நீண்ட தூர எறிகணைகளைப் பாவித்து ரஸ்யாவின் தூர இலக்குகளை உக்ரைன் தாக்கத் தொடங்கி உள்ளது. மேற்குலகம் வழங்கிய எறிகணைகளை, நீண்ட தூர இலக்குகளைத் தாக்கக்கூடிய கனரக ஆயுதங்களை ரஸ்ய மண்ணில் பாவிக்கக் கூடாது என முன்னர் மேற்குலகம் வழங்கியிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்ட நிலையிலேயே உக்ரைனின் புதிய தாக்குதல்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன. பதிலுக்கு உக்ரைன் இலக்குகளைக் குறிவைத்து ரஸ்யாவும் தாக்குதல்களை அதிகரித்திருக்கின்றது.
 

அதேவேளை, கிரிமியாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு அமெரிக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்கத் தூதுவரிடம் தனது ஆட்சேபனையை ரஸ்யா தெரிவித்திருக்கின்றது. தனது நிலைகளைத் தாக்குவதற்கான ஆயுதங்களை வழங்கியது மட்டுமன்றி அவற்றைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கர்கள் உதவுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள ரஸ்யா குறித்த தாக்குதல்களுக்கு முறையான பதிலடி வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

 

அதேவேளை, மேற்குலகின் ஆயுதங்கள் தனது தேசத்தைத் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனுக்கு குறித்த ஆயுதங்களை வழங்கும் நாடுகள் போரில் பங்கு கொள்ளும் நாடுகளாகக் கருதப்படவும், குறித்த நாடுகளின் இலக்குகளைத் தாக்குவதற்கு தனக்கு தார்மீக அடிப்படையிலான உரிமை உள்ளதாகவும் ரஸ்யா கருத்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் போர் உக்ரைன் நாட்டையும் கடந்து பிராந்தியப் போராக மாறும் அபாயம் உள்ளதாக நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், ஐந்தாவது முறையாக ரஸ்யாவின் அதிபராகப் பதவியேற்றுள்ள விளாடிமிர் புட்டின் அடுத்தடுத்து இரண்டு நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயம் மேற்குலகின் கவனத்தையும், கரிசனையையும் பெரிதும் ஈர்த்திருக்கின்றது.

முன்னதாக வட கொரியாவுக்குச் சென்ற புட்டின் தொடர்ந்து வியட்நாமுக்கும் சென்று வந்திருக்கின்றார்.
 
வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த புட்டின் பல்வேறு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டு உள்ளார். வட கொரியாவும் முன்னைய சோவியத் ஒன்றியம் மற்றும் ரஸ்யாவும் நீண்டகால நட்பு நாடுகள். தற்போதைய நிலையில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் குற்றச்சாட்டில் வட கொரியா மீதும், உக்ரைன் போரை ஒட்டி ரஸ்யா மீதும் மேற்குலகினால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்த விடயம். அதேவேளை, உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள ரஸ்யாவுக்கு இரகசியமான முறையில் வட கொரியா ஆயுதங்களை விநியோகித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டும் மேற்குலகினால் தொடர்ச்சியாகச் சுமத்தப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை இரண்டு நாடுகளுமே மறுத்துள்ள போதிலும் ரஸ்யா, சீனா, வட கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மேற்குலக சித்தாந்தத்துக்கு எதிரான நாடுகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுவதையும் தனது ஒற்றைத் தலைமைத்துவத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது தலைமைக்குச் சவால் விடும் வகையில் செயற்படும் நாடுகளை எப்படியாவது வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்யும் என்பது வரலாறு. ரஸ்யாவை போர் வலையில் வீழ்த்தி அதன் பலத்தை உடைக்க முயற்சி செய்யும் அமெரிக்கா, சமாந்தரமாக தாய்வான் விடயத்தில் சீனாவையும் போரில் குதிக்கச் செய்ய பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்வதைப் பார்க்க முடிகின்றது. தென் கொரியாவைக் கொம்பு சீவி விடுவதன் மூலம் வட கொரியாவைக் கொதிநிலையில் வைத்திருக்கும் அதேவேளை தனது நண்பனான இஸ்ரேலைப் பாவித்து ஈரானை தொடர் அச்சத்தின் கீழ் வைத்திருக்கிறது.

தாக்கத்துக்கு எதிரான மறு தாக்கம் என்ற நியூட்டனின் விதிக்கு ஒப்ப அமெரிக்காவின் எதிர்ப்பைச் சமாளிக்க தாம் ஒன்று திரள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்த நாடுகள் உள்ளன. அது இயல்பானதும் கூட.

90களில் நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் உடைவோடு பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டதாகக் கருதப்பட்டாலும், அது வேறு ஒரு விதத்தில் தொடர்கிறது அல்லது தொடர நிர்ப்பந்திக்கப்படுகின்றது என்பதையே இன்றைய சூழல் புலப்படுத்துகின்றது.
 
வட கொரியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாக வெளியான செய்திகள் மேற்குலகின் அதீத கவனத்தை ஈர்த்துள்ளன. உக்ரைன் போர் புதிய பரிமாணத்தை நோக்கிச் செல்லும் நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு பலப்படுவது மேற்குலகிற்கு அச்சுறுத்தலான செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ரஸ்யாவின் நீண்ட கால நட்பு நாடான வியட்நாமுக்கு புட்டின் மேற்கொண்ட விஜயத்தின் போது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது. இது மேற்குலகைப் பொறுத்தவரை ஒரு ஆறுதலான செய்தியாக இருக்கக் கூடும். ஆனால், வியட்நாமைப் பொறுத்தவரை அது தனது ஆயுத தளபாட தேவைகளில் 80 விழுக்காட்டை ரஸ்யாவிடம் இருந்தே பெற்றுக் கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியாவில் மூன்றாவது முறையாக தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நரேந்திர மோடி ரஸ்யாவுக்கு வருகை தந்து அதிபர் புட்டினைச் சந்திக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தச் சந்திப்பு யூலை 8ஆம் திகதி நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டின் பின்னர் தற்போது மோடி ரஸ்யா செல்லவுள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

தொடர்ந்து துருக்கி அதிபர் எர்டோகான்-புட்டின் சந்திப்பு அடுத்த மாதத்தில் நிகழ உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

உலக நாடுகளின் தலைவர்களை அடுத்தடுத்து புட்டின் சந்திப்பது தற்செயலானதா அல்லது மேற்குலக நாடுகளின் தலைமைப்படுத்தல் திட்டத்தை முறியடிக்க அவர் மேற்கோண்டுவரும் வியூகமா என்ற கேள்வி எழுகின்றது.

உலகப் பொருளாதார வல்லரசு என்கின்ற இடத்தில் உள்ள அமெரிக்காவின் நிலை ஏற்கனவே ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. அந்த இடத்தைப் பிடிப்பதற்கான சீனாவின் முயற்சி அதீத வேகம் பெற்றுள்ள நிலையில் தனது இடத்தைத் தக்க வைக்க அமெரிக்கா பல வழிகளிலும் முயன்று வருகின்றது.

அதேவேளை, மேற்குலகின் சட்டாம்பித்தனமான பேச்சுக்கு உலக நாடுகள் மத்தியில் செல்வாக்குக் குறைந்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது. தங்கள் கொள்கைகளை ஏனைய நாடுகளின் மீது திணிக்கும் மேற்குலகின் செயற்பாடுகளுக்கு உலகின் பல பாகங்களிலும் எதிர்ப்பலை உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. உலகின் ஏகபோக பணப் பரிவர்த்தனை நாணயமாகக் கருதப்படும் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தி நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேற்கொள்வதை பல நாடுகள் தவிர்க்கத் தொடங்கியுள்ளன. அத்தோடு, உக்ரைன் மற்றும் பலஸ்தீனப் போர்களை ஆதரிக்கும் மேற்குலகின் போக்கும் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகின்றது.

பனிப்போர்க் காலகட்டத்தில் உலகம் எவ்வாறு இரண்டு முகாமாகக் காணப்பட்டது என்பது நம்மில் பலருக்கும் நினைவிருக்கக் கூடும். உலகம் முழுவதும் உளவாளிகளால் அது நிறைந்திருந்தது. ஆங்காங்கே ஆயுத மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அணுவாயுத உற்பத்தியில் வல்லரசுகள் அதீத நாட்டம் கொண்டிருந்தன. எப்போதுமே உலகம் முழுவதும் ஒரு பதட்ட நிலைமை அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அதே காலகட்டம் மீண்டும் உருவாகி வருகிறதோ என்ற அச்ச நிலை தற்போது தோன்றியுள்ளது. ஆனால், அவ்வாறான ஒரு நிலைமை உலகின் எதிர்காலத்துக்கு எவ்வகையிலும் நன்மை பயக்கப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை.

சுவிசிலிருந்து சண் தவராஜா
 

Leave a Reply