TamilsGuide

சீனாவில் குடியிருப்பு மீது விழுந்த ராக்கெட் பாகம்

பிரபஞ்சத்தை ஆராயும் முயற்சிக்காக சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து ஒரு செயற்கை கோளை விண்ணில் ஏவின.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2சி ராக்கெட்டில் அந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், ராக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் மீண்டும் பூமி நோக்கி வேகமாக வந்தது. புகையை கக்கியபடி சீறி பாய்ந்து வந்த ராக்கெட்டின் பாகத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்தப்படி ஓடினர்.

அந்த ராக்கெட் பாகம் குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. குடியிருப்புக்குள் ராக்கெட் பாகம் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் தேசிய விண்வெளி கழகம் கூறும் போது, காமா-கதிர் வெடிப்புகள் உள்பட வான் நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்வதே இந்த செயற்கைக்கோளின் பணி. வானியல் கண்டுபிடிப்புகளை முன்னேற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தது.

இது சீனா மற்றும் பிரான்ஸ் இணைந்து உருவாக்கிய முதல் வானியல் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது,
 

Leave a comment

Comment