TamilsGuide

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம் - ஜனாதிபதி

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று (22) நடைபெற்றது.

இதற்கு முன்னதாக மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.

இதன்பின்னர் மட்டக்களப்பு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உரிமையற்ற 27,595 குடும்பங்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. அதில் இதுவரை 2610 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
 

Leave a comment

Comment