TamilsGuide

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் – ஜனாதிபதி

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளில் பாரியளவிலான விவசாய செயற்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டு பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாரிய பணிகள் இங்கு செயல்படுத்தப்படவுள்ளதாகவும் இதன்படி திருகோணமலையை பிரதான ஏற்றுமதி பொருளாதா மையமாக மாற்ற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொழிற்கல்வித்துறையின் சீர்திருத்தத்தின் மூலம் அதிகளவான இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் மூன்று, நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களை நியமிக்க முடியாததால், பாடசாலைக் கல்வி மேம்பாட்டிற்காக, இன்று ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிட்டதால் அதற்கேற்ப, புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாங்கள் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்ட போது சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு மீண்டும் அபிவிருத்தி அடையும் போது அந்த மக்களை ஒருபோதும் மறக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கும் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதால் இப்போது உங்களுக்கு ஒரு நிலத்தின் சட்டபூர்வ உரிமை உள்ளதாகவும் இனி யாரும் அடிபணிந்து வாழத் தேவையில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment