TamilsGuide

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மர்மநபர் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் என்ற பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் கடையில் இருந்த பொதுமக்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். பலர் கடையில் இருந்த அறைகளில் பதுங்கி கொண்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் சுட்டதில் அந்த நபர் பலத்த காயமடைந்தார்.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

போலீசார் கூறும்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர். ஆர்கன்சாஸ் கவர்னர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் கூறும்போது, போர்டைசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் கவலை அடைந்துள்ளேன். இதில் விரைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment