TamilsGuide

பிரான்ஸ் தேர்தலுக்கு முன்பே பின்வாங்கும் வருங்கால பிரதமர் - குழப்பம் துவங்கியது

பிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான். ஆனால், தேர்தல் பல குழப்பங்களை உருவாக்கும் என விலாவாரியாக விளக்குகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

பிரான்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், பிரான்சின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான National Rally கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என கணித்துள்ளன. National Rally கட்சித்தலைவரான ஜோர்டன் பார்டெல்லா (Jordan Bardella, 27) என்பவர்தான் பிரான்சின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தேர்தலுக்கு முன்பே, தனக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தேர்தலில் வென்றாலும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளார் ஜோர்டன். அதாவது, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் கட்சி மட்டுமே, தாங்கள் கொண்டுவர நினைக்கும் திட்டங்களை எதிர்ப்பின்றி நிறைவேற்ற முடியும். ஆகவே, வெற்றி பெற்றாலும், பெரும்பான்மை இல்லாவிட்டால் வெற்றி பெற்றும் பயனில்லை என்று கூறும் ஜோர்டன், தங்களை பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆக, ஜோர்டனுடைய National Rally கட்சி, பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அடுத்து அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்ற கட்சியினரையோ, அல்லது சில கட்சிகளை கூட்டணியாக இணைத்து அவர்களிடமோ, பிரதமர் பதவியை ஏற்குமாறு கோருவார் ஜனாதிபதி மேக்ரான்.

விடயம் என்னவென்றால், பிரான்ஸ் அரசியல் சாசனத்தின்படி, இன்னும் ஒரு வருடத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தமுடியாது. எனவே, மறு தேர்தலுக்கும் வாய்ப்பில்லை. ஆக, எப்படியும் பிரான்ஸ் அரசியலில் சர்வகுழப்பம்தான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.  
 

Leave a comment

Comment