TamilsGuide

மெய்யழகன் படக்குழுவினர் வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

90 காலக்கட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் கனவு காதலனாக இருந்தவர் அரவிந்த்சாமி, இவர் ரஜினியின் தளபதி படத்தில் கலெக்டராக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர். அதை தொடர்ந்து இவர் ரோஜா படத்திலும் நடித்து பெயர் பெற்றார்.

பின்னர் பம்பாய், மின்சார கனவு, இந்திரா என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருபவர்.

மேலும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வரும் அரவிந்த் சாமிக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் சில காலங்கள் ஓய்வில் இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனி ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது.

தொடர்ந்து தலைவி படத்தில் எம்ஜிஆராகவும், சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்க சூர்யாவின் 2D நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அரவிந்த்சாமியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment