TamilsGuide

மலையக மார்க்கத்திற்கான சேவைகள் பாதிப்பு - புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு

நாட்டிலுள்ள ரயில்வே போக்குவரத்தின், பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான சேவைகள் இன்று காலை பாதிக்கப்பட்ட நிலையில் சேவைகளில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.

இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் தூக்கி வீசப்பட்டு ஏற்பட்ட விபத்தால் அந்த ரயில் தற்போது கம்பஹா நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமடைந்திருந்தன.

கனேமுல்ல, புலுகஹகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த ரயில் கட்டுப்பாட்டாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தலவாக்கலை மற்றும் வடகொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் மலையக மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயிலே நேற்று (15) இரவு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையம் வரையும், பதுளையில் இருந்து கோட்டை வரை செல்லும் ரயில்கள் நானுஓயா ரயில் நிலையம் வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நிலையங்களுக்கு இடையில் பயணிகளை மாற்றுவதற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Comment