TamilsGuide

தந்தைக்கு மகள்கள் என்றும் குழந்தையே -நடிகர் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா-தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோரின் காதல் திருமணம் கடந்த 10-ந்தேதி சென்னையில் நடந்தது. தொடர்ந்து சாலிகிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் பேசியதாவது:-

நடிகராக பலமுறை இந்த மேடையில் ஏறிய நான் இன்று ஒரு பெண்ணை கட்டிக் கொடுத்த தந்தையாகவும் மாமனாராகவும் நிற்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கை மேலே வந்து கீழே விழுந்து திரும்பவும் மேலே வந்து இப்போது சம நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.

தம்பி ராமையா உடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இருவரும் சம்பந்தி ஆவோம் என எங்கள் இரண்டு பேருக்கும் தெரியாது. நல்ல பண்பாடு உள்ள குடும்பம் அவர் குடும்பம். வெளிநாட்டில் நான் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் உமாபதி ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அப்போதே எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவர் விரைவில் ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுப்பார். அதற்குரிய அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது. கூடிய விரைவில் அதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

என் முதல் குழந்தையாக ஐஸ்வர்யா பிறந்தார். அவள் பிறந்ததில் இருந்து எனக்கு நேர் மறையான விஷயங்கள் பல நடந்தன.

ஒரு நாள் என் இளைய மகள் என்னிடம் வந்து அப்பா ஐசு உங்களிடம் ஏதோ தனியாக பேச வேண்டும் என சொல்கிறார் என்று கூறினார்.

நான் என்ன விஷயம் என கேட்க எனக்கு தெரியாது உங்களிடம் தான் பேச வேண்டுமாம் என சொன்னார். கதை, திரைக்கதை எழுதி உள்ளதால் காதல் விஷயம் என யூகித்துக் கொண்டேன்.

ஆனால் மாப்பிள்ளை யார் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஐஸ்வர்யா என்னிடம் வந்து விஷயத்தை சொன்னார். மாப்பிள்ளை யார் என கேட்டேன் உமாபதி என்றாள்.

நான் ஷாக் ஆகி உமாபதியா எனக்கேட்டேன். என் மனைவி என்னிடம் நீங்கள் என்ன சொல்றீங்க என கேட்டார். அவரிடம் நான் என்ன சொல்வதற்கு. நல்ல வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். 16 வயது 14 வயது என்றால் நாம் யோசிக்கலாம்.

அவர்களது வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

நிறைய மிராக்கிள் நடந்துள்ளது என்றேன். ஐஸ்வர்யா இப்போதும் எனக்கு குழந்தையாக தான் தெரிகிறார். ஒவ்வொரு தந்தைக்கும் தனது மகள் திருமணம் ஆனாலும் அவள் என்றும் குழந்தைதான். தொடர்ந்து தம்பி ராமையா குடும்பம் எங்கள் குடும்பம் சேர்ந்து ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பேசி முடிவு செய்தோம். திருமணம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது அவர்களது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a comment

Comment