TamilsGuide

மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடும் முதலாளிமார் சம்மேளனம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 70 சதவீத சம்பள அதிகரிப்பற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படியுமின்றியின் 70 சதவீதத்தால், உடனடியாக அதிகரிக்கவேண்டுமென சம்பள நிர்ணய சபை தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறுவழியில்லை என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வியாபார நிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பேணவும் சம்பள அதிகரிப்பு உற்பத்தித்திறனுடன் நெருக்கமாக இணைக்கப்படவேண்டும் என்றும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேயிலை உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளை விடவும் இலங்கை ஏற்கனவே மிக உயர்ந்த உற்பத்திசெலவு, மிககூடிய நாட்சம்பளம் மற்றும் மிகக்குறைந்த உற்பத்தித்திறனுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிடுகின்றது.

குறிப்பாக, சம்பள நிர்ணய சபையால் புதிதாக அறிவிக்கப்பட்ட தேயிலை துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளமானது, இந்தியாவின் தேயிலைத்துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளத்தைவிட இருமடங்கு அதிகமாக இருப்பதால் உலக சந்தையில் இலங்கை தேயிலையின் உற்பத்தி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment

Comment