TamilsGuide

உக்ரைன் இதை செய்தால் உடனடி போர் நிறுத்தம் - உறுதி அளித்த ரஷிய அதிபர் புதின்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அமைதிக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஜி-7 மாநாடு நடைபெறும் இத்தாலிக்கு சென்று தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் உக்ரைன் இரண்டு விசயங்களை செய்தால் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் என ரஷிய அதிபர் புதின் உறுதி அளித்துள்ளார்.

ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிபர் புதின் பேசும்போது "ரஷியா தன்னுடன் 2022-ம் ஆண்டு இணைத்துக் கொண்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து துருப்புகளை திரும்பப்பெற தொடங்கினால், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை கைவிட முடிவு செய்தால் உடினடியாக போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட தயார். நாங்கள் அதை உடனடியாக செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் ஒன்று கூடி உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான திட்டத்தை வகுக்க உள்ளனர். அமெரிக்கா- உக்ரைன் இடையே 10 வருட பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் இருந்து போர் நிறுத்தம் குறித்த பரிந்துரை வந்துள்ளது. இதை உக்ரைன ஏற்குமா என்பது சந்தேகம்தான்?.
 

Leave a comment

Comment