TamilsGuide

அமீரகத்தில் 23-ந்தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு - தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அமீரகத்தில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. கடந்த செவ்வாய்கிழமை பெய்த இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதில் கடந்த 16-ந்தேதி ராசல் கைமாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் பயணம் செய்த அமீரகத்தை சேர்ந்த முதியவர் பலியானார்.

அதனை தொடர்ந்து துபாயில் 47 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஊழியர் மழையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக பலியானார். தொடர்ந்து சார்ஜாவில் மழைவெள்ளத்தில் காரில் சிக்கிக்கொண்ட 2 பிலிப்பைன்ஸ் நாட்டு ஊழியர்கள் மூச்சடைத்து பலியானார்கள். இதனை அந்நாட்டு துணைத்தூதரகம் உறுதி செய்துள்ளது.

மேலும் துபாய், சார்ஜா, அஜ்மானில் உள்ள பல்வேறு சாலைகள் மழைவெள்ளத்தில் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) லேசான பனிமூட்டத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்படும். அடுத்த வார தொடக்கத்தில் வரும் 22-ந் தேதி நாடு முழுவதும் பரவலாக லேசான மழை காணப்படும். அதற்கு அடுத்த நாள் 23-ந் தேதி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைப்பொழிவுக்கு பிறகு வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment