TamilsGuide

முதலாளிமார் சம்மேளனத்தை எச்சரித்த செந்தில் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணய சபையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு முதலாளிமார் சம்மேளனம் சமூகமளிக்காதமை குறித்து இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்வு எட்டப்படும் நிலையில், முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருகை தராமல் இருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பள நிர்ணய சபையிடம் அலட்சிய போக்கை கடைப்பிடிக்கும் முதலாளிமார் சம்மேளனம், தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவார்கள் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இதனால் தான் இ.தொ.கா இவர்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் போக்கை கடைப்பிடிக்கின்றது.

இவர்களுக்கு ஒரு சதவீதமேனும் சம்பள அதிகரிப்பு வழங்குவதில் உடன்பாடு இல்லை. எனவே தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இ.தொ.கா, முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்க தயாராகி வருகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment