TamilsGuide

வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் – வடக்கு மாகாண ஆளுநர்

இவ் வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி, கிளிநொச்சியில் இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை தெரித்தார்.

2030 ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்திருந்தது.

எனினும் இவ் வருட இறுதிக்குள் பெரும்பாலான வகையில் கண்ணிவெடி அகற்றப்பட்டு, மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும், சர்வதேச அமைப்புகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் நன்றி தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர்,

பூநகரி மற்றும் முகமாலை பகுதிகளில் அதிகளவு கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடி அகற்றப்படாமை பாரிய சவாலாக காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் பெண்களை ஈடுப்படுத்திய நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, இலங்கையில் பெண்கள் முதன் முதலாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை வவுனியாவில் ஆரம்பித்தமையையும் அவர் நினைவுப்படுத்தினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment