TamilsGuide

IMF இன் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் - ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “ஜூன் மாதத்திற்குள் மூன்றாவது தவணையை எதிர்பார்க்கிறோம். அதுதான் நிலையான நடைமுறை.

கடன் மறுசீரமைப்பிற்கு பின்னர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையே ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் உள்ளது.

அதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தை முன்வைப்பதற்கான திகதியை சர்வதேச நாணய நிதியம் தீர்மானிக்கும்.

இதற்குப் பிறகுதான் மூன்றாவது தவணையாக 337 மில்லியன் டொலர்களைப் பெறமுடியும். ஆனால் அதற்கு முன் நாம் முடிக்க வேண்டிய பணி ஒன்று உள்ளது.

அதாவது கடனை மறுசீரமைப்பதற்கான ஒருமித்த கருத்தை எமது கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.

எனினும் அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களின் பூர்வாங்க ஒப்புதலைப் பெற்றுள்ளோம்.

வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கான வலுவான எதிர்பார்ப்புகள் உள்ளதாக நேற்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. உள்நாட்டு அரச நிறுவன கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையும் என மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நம்பிக்கை அளித்துள்ளார்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment