TamilsGuide

எந்த அரசாங்கமும் பணத்தை அச்சிட முடியாது – பந்துல குணவர்தன

”நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக”  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவது  சவாலான பணி.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை திறம்பட நிர்வகித்தார்.  ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

பின்னர் கடன் மறுசீரமைப்பு குறித்தும் ஆராயப்பட்டது. அதனால் தற்போது நாடு சுமூகமான பொருளாதார நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை விருப்பமின்றியேனும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்போதைய புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதன் ஊடாக நிதி நிர்வாகத்தில் ஒழுக்கத்தைப் பேண முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும். அத்தோடு நாட்டின் எதிர்காலமும் கேள்விக்குரியாகிவிடும்.

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், கடந்த கால நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாகவே, சமூர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணந்தை வழங்கும் அஸ்வெசும சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment