TamilsGuide

அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள விரிப்புக்கு தடை விதித்த பாகிஸ்தான்

விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். அவரது தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ம் தேதி புதிதாக உருவாக்கப்பட்டது.

இதற்கிடையே, முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசுகையில், நட்பு நாடுகளிடம் இருந்து இனி கடன்களை கேட்கமாட்டேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்பேன் என வெளிநாடுகளின் தூதர்களிடம் கூறியுள்ளேன். நாம் நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, வறுமையை எதிர்த்து போராட வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம். வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்நிலையில், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும். பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின்கீழ் இந்த தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்துள்ளது.

ஆனாலும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment