TamilsGuide

எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த பத்மினி... பானுமதி கொடுத்த அதிர்ச்சி : சின்னப்ப தேவரின் முதல் படம் உருவான கதை

எம்.ஜி.ஆருடன் 20 படங்களுக்கு மேல் நடித்த சின்னப்ப தேவர், சொந்தமாக படம் தயாரிக்க ஆசைப்பட்டு நண்பர்களுடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் தயாரித்தவர் தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவர். இவரது படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர் நடிகை பத்மினியிடம் கால்ஷீட் கேட்க, அவரோ இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள எம்.ஜி.ஆர், தனது ஆரம்ப காலத்தில் இருந்தே சின்னப்ப தேவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் அவருக்கு எதாவது கேரக்டர் இருக்கிறது என்றால் உடனடியாக அவரை புக் பண்ண சொல்லிவிடுவது எம்.ஜி.ஆரின் வழக்கம். அதேபோல் கேரக்டர் இல்லை என்றாலும் எதாவது ஒரு காட்சியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துவிடுவார்.

இப்படி எம்.ஜி.ஆருடன் 20 படங்களுக்கு மேல் நடித்த சின்னப்ப தேவர், சொந்தமாக படம் தயாரிக்க ஆசைப்பட்டு நண்பர்களுடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நல்லதங்காள் என்ற படத்தை தயாரிக்கிறார். துரதிஷ்டவசமாக இந்த படம் வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு ஒரு படத்திற்கு நிதியுதவி செய்கிறார். அந்த படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் சின்னப்ப தேவர் நடித்திருந்தார். ஆனாலும் அந்த படமும் வெற்றியை பெறவில்லை.

தயாரித்த படம், நிதியுதவி செய்த படம் என இரண்டுமே தோல்வியடைந்தாலும், படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த சின்னப்ப தேவர், நேராக எம்.ஜி.ஆரிடம் சென்று கால்ஷீட் கேட்டுள்ளார். உங்கள் தயவில் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இப்போது என் தம்பியை இயக்குனர் ஆக்கி பாக்க வேண்டும். அதற்கு நீங்கள் மனது வைத்தால் தான் முடியும். நீங்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர் நீங்கள் நான் உங்கள் படத்தில் நடிப்பதாக விளம்பரம் கொடுத்துவிட்டு என்னை சந்தித்திருக்கலாம். யார்ருக்கோ நடித்து கொடுக்கிறேன் உங்களுக்கு நடிக்க மாட்டேனா கண்டிப்பா நடித்து கொடுக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, தேவர் பிலிம்ஸ் என்ற பெயரில் தனியாக பட நிறுவனம் தொடங்கிய சின்னப்ப தேவர், இந்த படத்தில் ஏ.பி.நாகராஜனை கதை திரைக்கதை எழுத சொல்லிவிட்டு, சின்னப்ப தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் இந்த படத்தின் இயக்குனராக ஒப்பந்தமாகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் நடைபெற இருந்தது. இந்த படத்தில் நடிக்க நடிகை பத்மினியிடம் எம்.ஜி.ஆர் கால்ஷீட் கேட்க அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் கோவையில் படப்பிடிப்பு என்றதும், இப்போது சென்னையில் அதிகமான படங்களில் நடித்து வருவதால் கோவைக்கு வந்து இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி படத்தில் இருந்து விலகியுள்ளார். அதன்பிறகு பத்மினி இல்லை என்றால் என்ன பானுமதியை ஒப்பந்தம் செய்யலாம் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.

அந்த காலக்கட்டங்களில் யோசித்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு வந்த பானுமதி, எம்.ஜி.ஆர் – சின்னப்ப தேவர் இருவரும் வந்து கேட்டபோது உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு உருவான படம் தான் தாய்க்கு பின் தாரம். 1956-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
 

Leave a comment

Comment