TamilsGuide

2.2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை

சர்வதேச நீர் தினமான இன்று உலகளவில் 2.2 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு  சுத்தமாக குடிநீர் கிடைப்பதில்லை என அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.

சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். அந்தவகையில் கடந்த 1993 ஆம் ஆண்டு, மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.

இந்நிலையில் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது உள்ளிட்ட பல்வேறு மனித நடவடிக்கைகளால் நீர் மாசுபாடு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை  ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேசிய எல்லைகளைக் கடக்கும் நீர்வழிகள் மூலம் தங்கள் நீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர் எனவும், குறிப்பாக  ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்களை அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை, 153 ஆகக்  காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலக மக்கள் தொகையில் பாதி பேர் வருடத்திற்கு ஒரு முறையாவது கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

உலக வங்கியின் கணிப்புகளின்படி, 2030 ஆம் ஆண்டளவில் தண்ணீருக்கான தேவை அதிகரிக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது. இதேவேளை நாட்டின் மக்கள் தொகையில் 62 சதவீதமான பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment