TamilsGuide

நடிப்பு, நடனம் மீது தான் தீராதக் காதல்

தமிழ்த்திரை உலகில் நல்ல முகலட்சணமான நடிகைகள் 80ஸ் காலகட்டத்தில் பலர் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் ஸ்ரீவித்யா. இவரது காதல் பற்றியும், அதன்பிறகு நடந்த சம்பவங்கள் குறித்தும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

சினிமாவில் ஈடுபாடு காரணமாகத் தான் என்னால் 30 வருடங்களாக சினிமாவில் ஜொலிக்க முடிந்தது என்கிறார் நடிகை ஸ்ரீவித்யா. எத்தனை பெரிய செல்வாக்கு கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும் எனக்கும் நிறைய பிரச்சனைகள் வரத்தான் செய்தன. எனக்கும் அம்மாவைப் போலவே நல்ல குரல்வளம் உண்டு.

இசை அரசியான அம்மாவுக்கு நான் இசை இளவரசியாக வேண்டும் என்றே ஆசை. எனக்கோ நடிப்பு, நடனம் மீது தான் தீராதக் காதல் என்கிறார் ஸ்ரீவித்யா. இன்னும் தன் வாழ்க்கையில் நடந்த முக்கிய தருணங்களை இவ்வாறு விவரிக்கிறார். 

அம்மா பாட்டு கிளாஸ் போகச் சொன்னார். நானோ நடன கிளாஸ் போக அனுமதித்தால் பாட்டு கிளாஸ் போகிறேன் என்றேன். அப்படியே பாட்டும், பரதமும் என் வாழ்வில் கிடைத்தது.

அப்போது எங்கள் வீட்டருகே நடன நடிகை சகோதரிகள் வீடு இருந்தது. அவர்கள் வீட்டில் போய் விளையாடுவேன். அப்போது அந்த அத்தை உனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்பார்கள். அவரிடம் பேசுகிறாயா என்பார். என்னப் பேசுவாய் என்று கேட்பார். நான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்பேன் என்று சொன்னேன். 

உடனே எம்ஜிஆருக்குப் போன் பண்ணி என்னிடம் கொடுத்துவிடுவார்கள். நானும் எம்ஜிஆரிடம் பயம் இல்லாமல் ஐ லவ் யு சொல்வேன். அம்மாவிடம் பலரும் சொல்லும்போது அவரும் அரைமனதாய் என்னை சினிமாவில் நடிக்க வைத்தார். நானும் படத்தில் போராடி ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லாமே சிறுசிறு வேடங்கள். அன்று மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை சந்தித்து வாய்ப்பு கேட்டேன்.

அவரும் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். நான் கதாநாயகி ஆனேன். இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். ஆனால் வெளிக்காட்டவில்லை. அப்போது ஒரு டைரக்டர் சொன்னார். ‘ஜெய்சங்கரை நீ காதலிக்கலாம். ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு இது தெரிந்தால் அவ்வளவு தான் பட வாய்ப்பே கிடைக்காது’ என்றார். அன்று முதல் என் காதலை எனக்குள் புதைத்தேன். அதன்பிறகு அவர் என்னிடம் காதலை சொல்லும் போது நான் ஏற்க மறுத்தேன்.

ஒரு நாள் ஜெய்சங்கர் சொன்னார். ஆண்பாவம் பொல்லாதது தான். ஒருவனை தூண்டிவிட்டு வேதனை படுத்தும் நீ ஒருநாள் ஆண்வர்க்கத்தாலேயே அவஸ்தைப் படுவாய் என்றார். அது சாபம் தான். அதன்பிறகு மலையாளப்பட உலகிற்குச் சென்றுவிட்டேன். இவ்வாறு ஸ்ரீவித்யா தெரிவித்துள்ளார். கடமை நெஞ்சம், அவர் எனக்கே சொந்தம், நூற்றுக்கு நூறு ஆகிய படங்களில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா இணைந்து நடித்துள்ளனர்.
 

Leave a comment

Comment