TamilsGuide

அண்ணாமலை படத்தைப் பார்த்து சுரேஷ் கிருஷ்ணாவை அறிவு இருக்கான்னு கேட்ட கே. பாலச்சந்தர்.. அதிர்ந்து போன இயக்குநர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ்டர் பீஸ் படங்களில் அண்ணாமலை படத்திற்கு எப்பவுமே தனி இடம் உண்டு. கவிதாலயா தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அண்ணாமலை திரைப்படத்தினை முதலில் இயக்க ஒப்பந்தமானவர் இயக்குநர் வசந்த். பின்னர் சில காரணங்களால் அது நிகழாமல் போக கே.பாலச்சந்திடம் உதவியாளராக இருந்து கமல்ஹாசனை வைத்து சத்யா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

ரஜினிக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தையும், பக்கா கமர்ஷியல் படமாகவும் வெளிவந்த அண்ணாமலை திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. ஒருபக்கம் கே.பாலசந்தர் வணிக நோக்கில் படங்களைத் தயாரிக்க மறுபுறம் நல்ல கதையம்சம் உள்ள படங்களையும் இயக்கினார். இப்படி அவர் வணிக நோக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாமலை திரைப்படத்தினைத் தயாரித்தார்.

இந்தப்படம் கலெக்ஷனில் அள்ளியது. ரஜினிக்கா தேவா முதன்முதலில் இசையமைத்தார். மேலும் ரஜினியின் டைட்டில் கார்டில் இடம்பெறும் ஆஸ்தான பின்னணி இசையையும் உருவாக்கி அதை ரஜினியின் லோகோவாகவே மாற்றினார் தேவா.

குஷ்பு, சரத்பாபு, ஜனகராஜ், மனோரமா, ராதாரவி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது. இந்தப் படத்தின் ஷுட்டிங்கை முடித்து பின்னர் அனைத்து போஸ்ட் புரடக்சன் பணிகளையும் முடித்து கே.பாலச்சந்தரிடம் போட்டுக் காண்பித்துள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. இன்னும் சில  தினங்களில் படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பிரிவியூவைப் பார்த்த பாலச்சந்தர் வெளியே வந்திருக்கிறார்.

அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பயத்திலேயே நின்றிருந்த சுரேஷ்கிருஷ்ணாவைப் பார்த்து, “உனக்கெல்லாம் அறிவிருக்கா.. யாராவது ரஜினிதான் ஹீரோ.. உடனே ஷூட்டிங் என்று சொன்னால் நம்பிடுவியா?“ என்று கேட்டு பின் படம் மிக அருமையாக வந்துள்ளது. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். ஒரு சவாலாக நீ எடுத்து சாதிச்சிட்ட“ என்று சுரேஷ் கிருஷ்ணாவைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.

கே. பாலச்சந்தர் சொன்னது போலவே இந்தப் படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. ரஜினியின் பெயர் திரையில் வருவது முதல் வந்தேண்டா பால்காரன் பாடல் முடியும் வரை தியேட்டரில் விசில் சத்தம் பறந்து கொண்டே இருந்தது என்று சுரேஷ் கிருஷ்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
 

Leave a comment

Comment