TamilsGuide

ஆங்கில மொழி மூலக் கல்வியை ஊக்குவிக்க ஜனாதிபதி நடவடிக்கை

ஆங்கில மொழியில் கல்வியைத் தொடரும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்காக, ஆங்கில மொழியில் பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை 3 வருட ஒப்பந்த அடிப்படையில் விரைவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவிவுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு, நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த உள்ளிட்ட 08 அமைச்சர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.

தேசியக் கல்விக் கொள்கைக் கட்டமைப்பானது குறுகிய கால மற்றும் இடைக்கால கல்வி மாற்றத்துக்கான செயல்முறைகளைக் கொண்டுள்ளது. மேலும், கல்வித் துறையில் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமானதும், விரைவானதுமான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

நாட்டில் 765 பாடசாலைகளில் மட்டுமே ஆங்கில மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதனால், ஆங்கில மொழியில் கல்வியைத் தொடர சமூகத்தில் பெரும் கேள்வி நிலவுகிறது. எனவே அதற்கான பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பிலான அமைச்சரவை உப குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 200,000 மாணவர்கள் ஆங்கில மொழியில் கல்வியைத் தொடர முடியும் என்பதோடு, இப்பணியைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக 2500 புதிய ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது.

இச்செயற்பாட்டினைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அறிந்து ஆங்கில மொழியில் பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை 3 வருட ஒப்பந்த கால அடிப்படையில் விரைவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவிவுறுத்தியுள்ளார்.

மேலும் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆங்கில மொழியில் கற்பிக்கக்கூடிய 1,100 பட்டதாரிகளை படிப்படியாக சேவையில் இணைத்துகொள்ளுமாறும்  ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment