TamilsGuide

வள்ளல் குணத்தில் மிரள வைத்த எம்.ஜி.ஆர்.. மெய்சிலிர்க்க வைத்த ஸ்டண்ட் மாஸ்டர்-ன் அனுபவம்..

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எத்தனையோ புகழுக்குச் சொந்தக் காரராக இருந்தாலும் அவரை ஒவ்வொரு வீட்டிலும் தெய்வமாக வைத்து வணங்கும் அளவிற்கு அவரை உயர்த்தியது அவரது வள்ளல் குணம். இல்லையென்று வந்தவர்களுக்கு கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய குணத்தால் இன்றும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் பொன்மனச் செம்மல்.

இவரின் வள்ளல் குணத்தை அவருடன் பல படங்களில் அவருக்குப் பதிலாக சண்டைக் காட்சிகளில் டூப் போட்டு நடித்த ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல் குறிப்பிடும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல் சென்னையில் தான் சேர்த்து வைத்த பணத்தில் அரை கிரவுண்ட் நிலம் வாங்கினாராம். அப்பொழுது அவர் கையில் இருந்த தொகை வெறும் மூவாயிரம் மட்டுமே. அப்போது மூவாயிரம் என்றால் இப்போது 3 இலட்சத்திற்குச் சமம். 3 மாத காலத்திற்குள் முழு பணத்தையும் கொடுத்து பத்திரம் முடித்துக் கொள்வதாக நில உரிமையாளரிடம் தெரிவிக்க அவரும் 3 மாதத்திற்கு மேல் ஆனால் பணமும் கிடையாது நிலமும் கிடையாது என்று கறாராகச் சொல்லி விட்டாராம்.

அப்பொழுது எம்.ஜி.ஆருடன் படப்பிடிப்பில் இருந்த சாகுல் குழப்பத்தில் நின்றிருந்ததைக் கவனித்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் அவரிடம் என்னவென்று கேட்க இவரும் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதானே நீ எம்.ஜி.ஆரிடமே கேட்கலாமே என்று கூற, அவர் தயங்கி நின்றிருக்கிறார். உடனே உதவியாளர் யார் யாருக்கே என்னவெல்லாமோ செய்கிறார். அவருக்காக உயிரையே கொடுத்து நீ சண்டைக் காட்சியில் நடிக்கிறாய் உனக்குச் செய்யமாட்டரா.. இரு அவர் நல்ல மூடில் இருக்கும் போது அழைக்கிறேன் என்று கூறினாராம்.

எம்.ஜி.ஆரின் உதவியாளர் சொன்னபடியே எம்.ஜி.ஆர் மதியம் சாப்பிட்டு முடித்து வெற்றிலை பாக்கு போடும் போது சாகுலை வரச்சொல்லி இருக்கிறார். உடனே சாகுலும் சென்று எம்.ஜி.ஆரிடம் தலையைச் சொறிந்து கொண்டே தயக்கத்துடன் கேட்க எம்.ஜி.ஆரும் அப்போது 100 ரூபாய் கட்டை எடுத்து அதில் கைக்கு வந்ததை பிய்த்துக் கொடுத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்லி விட்டு அடுத்த சில தினங்களில் சொன்னபடியே பத்திரத்தை முடித்து விட்டாராம் சாகுல். எம்.ஜி.ஆர் கொடுத்த தொகை எவ்வளவு என்று எண்ணிப் பார்க்க அதில் ரூ.5800 இருந்ததாம். அதன்பின் எம்.ஜி.ஆரிடம் பத்திரத்தைக் காண்பித்து ஆசி பெற்றிருக்கிறார்.

பின்னர் சில மாதங்கள் கழித்து கொஞ்சம் சம்பாதித்தவுடன் சாகுல் எம்.ஜி.ஆரிடம் பெற்ற தொகையை மீண்டும் கொடுக்கச் சென்ற போது எம்.ஜி.ஆர் முறைத்துப் பார்த்து ஏன் இவ்வாறு செய்கிறாய் உனக்கு பெண்பிள்ளைகள் இருக்கிறதல்லவா அவர்களுக்கு இந்தப் பணத்தில் நகையை வாங்கிப் போடு என்று அதட்டலாகக் கூறியிருக்கிறார். 

அவரும் உடனே நகையை வாங்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்து ஆசி பெற்றிருக்கிறார். இப்படி ஒருவர் இல்லையென்று வந்துவிட்டால் அவர் நினைப்பதைக் காட்டிலும் ஒருபடி மேலே சென்று உதவக் கூடய கலியுகக் கர்ணனாகத் திகழ்ந்திருக்கிறார் மக்கள் திலகம்.

தமிழச்சி கயல்விழி

Leave a comment

Comment