TamilsGuide

ரஷிய அச்சுறுத்தல் - டிரம்பின் கருத்து - அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்

கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

போர் 2-வது ஆண்டை நெருங்கும் நிலையில் உக்ரைனுக்கு உதவியளித்து வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் உரையாற்றிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிதி பங்களிப்பை முறையாக வழங்காத நேட்டோ (NATO) நாடுகளை ரஷியா தாக்கினாலோ அல்லது ஆக்கிரமித்தாலோ அமெரிக்கா உதவ முன் வராது என குறிப்பிட்டார்.

டிரம்பின் இந்த கருத்து பல ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷியாவை குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் ஜெர்மனி மற்றும் சோவியத் குடியரசு ஆகிய இரு பெரும் நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாடு, போலந்து. இதன் தலைநகரம் வார்சா (Warsaw).

இரண்டாம் உலக போர் முடிந்த பிறகும் பல தசாப்தங்கள் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது போலந்து.

இப்பின்னணியில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரன் (Emmanuel Macron) மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் (Olaf Scholz) ஆகியோரை சந்தித்தார்.

இச்சந்திப்பு குறித்து அவர் தெரிவித்ததாவது:

ரஷியாவை விட ராணுவ ரீதியாக பலம் குறைந்து இருப்பது பாதுகாப்பானது அல்ல.

ராணுவ தளவாட மற்றும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தற்போது மிக அவசியம்.

ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் மிக பெரும் அச்சுறுத்தலை நாம் குறைத்து மதிப்பிடுவதும் ஆபத்து.

ஐரோப்பிய நாடுகள், அடுத்து வரும் மாதங்களில் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும்.

இவ்வாறு டஸ்க் கூறினார்.

டிரம்பின் தற்போதைய கருத்து, அமெரிக்க துருப்புகளுக்கும், அமெரிக்காவின் நேச நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் என நேட்டோ தலைமை செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment