TamilsGuide

தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் நகர்கின்றது - பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு

தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இரண்டிற்கும் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆனால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும். தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது.

தேர்தல் அதிகாரிகள் ஜூலை மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் அரசாங்கம் தனது அபிவிருத்தி திட்டங்களை ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றினால், மாத்திரமே அது தேர்தல் ரீதியாக அவர்களுக்கு பயனளிக்கும்.

இந்த செயற்பாடு என்பது பொது நிதியை தவறாக பயன்படுத்துவதற்கு சமமானது.

அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் முடிக்குமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இரண்டு சுற்று நிருபங்கள் வழங்கியுள்ளோம்.

ஆனால் தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இது ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்யும் முயற்சியாகும்” என ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment