TamilsGuide

இளையராஜாவுக்கு கொடுக்காமல் ரஹ்மானுக்கு தேசிய விருது கொடுத்தேன்.. ஏன் தெரியுமா..? பாலு மகேந்திரா சொன்ன காரணம்..

இளையராஜாவின் வருகை இந்தி பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்களைக் கேட்க வைத்தது. ஆனால் ரஹ்மானின் வருகையோ இந்தி பேசும் ரசிகர்களையும் தமிழ் பாடல் பக்கம் ஈர்த்தது என சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமானார் ஏ ஆர் ரஹ்மான். அதற்கு முன்னர் விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ரஹ்மானை இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலச்சந்தர் தன்னுடைய ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்தார்.

ரோஜா படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி பட்டித் தொட்டியெல்லாம் அனைத்து வயதினரையும் முணுமுணுக்க வைத்தன. இந்த படத்துக்காக ஏ ஆர் ரஹ்மான் தேசிய விருதை வென்றார். 

அந்த தேசிய விருது கமிட்டியின் தலைவராக இருந்த இயக்குனர் பாலுமகேந்திரா ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைத்தது சம்மந்தமாக ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் அளித்த ஒரு நேர்காணலில் “ அந்த ஆண்டு இறுதிப் பட்டியலில் இளையராஜாவும் ரஹ்மானும் சம அளவில் ஓட்டு வாங்கி இருந்தனர். அதனால் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் ஜூரியான என்னிடம் வந்தது. எனக்கு இரண்டு ஓட்டுகள் உண்டு. அப்போது நான் கண்களை மூடி கடவுளிடம் வேண்டினேன், எனக்கு சரியான முடிவெடுக்கும் அறிவைக் கொடு என.

நான் என்னுடைய இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே செலுத்தினேன். ஏனென்றால் ஒரு 22 வயது பையன் இளையராஜா எனும் மேதைக்குப் போட்டியாக வந்து நிற்கிறான். அவன் பின்னால் ஆஸ்கர் கூட வாங்கலாம். ஆனால் அந்த 22 வயது பையனுக்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

நான் சென்னை வந்ததும் இளையராஜாவிடம் நான் எடுத்த முடிவை சொன்னேன். அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு “நீங்கள் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள்’ என சொன்னார்கள். இளையராஜாவை எல்லோருக்கும் ஒரு இசை மேதையாக தெரியும். ஆனால் அவரை ஒரு நண்பனாக ஒரு பரந்த மனதுள்ளவராக எனக்கு தெரியும்” எனக் கூறியுள்ளார்.

Sampatth Kumar
 

Leave a comment

Comment