TamilsGuide

இரண்டு முகம் கொண்ட குணச்சித்திர குரு இந்த பட்டாபி..!

திரைத்துறையில் பல்வேறு குணசித்திர நடிகர்கள் வலம் வந்தாலும், எல்லோரும் ஜொலிப்பதில்லை. ஒரு சிலர் மட்டும் தங்கள் முழு திறமைகளையும் காண்பித்து ரசிகர்களின் ஈர்ப்பை பெருகின்றனர்.

அந்த வரிசையில் கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை, தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் M.S.பாஸ்கர் அவர்கள்.

மெட்ராஸ் பாஷையை சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் யதார்த்தமாக பேசி நடிப்பார்கள்.. அதில் M.S.பாஸ்கர் அவர்கள் பலே கில்லாடி..அதற்கு எற்றாப்போல் தனது முக பாவனை, உடை, உடல் மொழி அனைத்தையும் மாற்றிவிடுவார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களில் ஓவர் ஆக்ட்டிங் செய்யாமல்.., கேரக்டராகவே படம் முழுவதும் வாழும் ஒரு அற்புதமான கலைஞன்.

1987ல் வெளி வந்த 'திருமதி ஒரு வெகுமதி' படத்தின் மூலம் ஆறுமுகமாகி பல படங்களில் நடித்தாலும், 2000ஆம் ஆண்டில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சின்ன பாப்பா பெரிய பாப்பா" தொடரில் நடித்த பட்டாபி கேரக்டரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அத்தொடரில் இவர் காது கேட்காமல் இருக்கும் வீட்டு வேலைக்காரராக நடித்திருப்பார். இத்தொடரில் முக்கிய கதாப்பாத்திராமாக ஸ்ரீப்ரியா, நிரோஷா இருவரும் நடித்திருப்பார்கள். அவர்கள் சொல்வது ஒன்று இவர் செய்வது ஒன்று என இவர் வரும் காட்சிகள் படு லூட்டியாக இருக்கும். பெரியவர்கள் முதல் குழைந்தைகள் வரை அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட கேரக்டர் பட்டாபி. அதை இன்றளவும் யாரும் மறந்து விட முடியாது.

இந்த தொடர் 2000 - 2006 வரை சீசன் 1, சீசன் 2 என 6 ஆண்டுகள் சக்கை போடு போட்டது. 6 ஆண்டுகள் இந்த தொடரில் பாட்டாபியாய் வாழ்ந்து வெள்ளித்திரைக்கு அஸ்திவாரம் போட்டார் என்று சொன்னால் மிகையாகது.

அதற்கு பின் சினிமாவில் அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள் பேசப்பட்டது. முக்கியமாக 2008இல் வந்த 'தசவதாரம்' படத்தில் 'ப்ராட்வே குமார்' எனும் கேரக்டரில் மெட்ராஸ் பாஷையிலும், பட்லர் இங்கிலிஷிலும் புகுந்து விளையாடி உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றார்.

2016 இல் வெளி வந்த 8 தோட்டாக்கள் படத்தில், கிருஷ்ணமூர்த்தி எனும் கதா பாத்திரத்தில் வாழ்ந்து, தனது திறமையான நடிப்பால் பார்வையாளர்கள் அனைவரையும் அழ வைத்து விட்டார். 

சில மாதங்களுக்கு முன்பு வெளி வந்த 'பார்க்கிங்' படத்தில், 'ஈகோ' என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் நடித்திருப்பார். அவருடைய வயதிற்கும்,  முக பாவனைகளுக்கும்...ஈகோவின் வெளிப்பாட்டை பல காட்சிகளில் பேசாமலேயே வெளிப் படுத்திருப்பார்.

M.S.பாஸ்கர் போன்ற கலைஞர்களுக்கு, கேரக்டர் யோசிக்க வேண்டிய அவசியமில்லை... காமெடியோ, செண்டிமெண்ட்டோ, வில்லத்தனமோ..எதுவாக இருந்தாலும்...கொடுக்கும் கேரக்டர்களில் தன்னை பொருத்தி கொண்டு படம் முழுவதும் வாழ்ந்து காட்டும் இரண்டு முகம் கொண்ட குணச்சித்திர குரு தான் இந்த பட்டாபி. 

Thiyaghu Ktr

Leave a comment

Comment