TamilsGuide

ஆச்சி மனோரமா... 

ஆச்சி’ மனோரமா... ஆண்கள் சூழ் உலகான திரைத்துறையில் ஐந்து தலைமுறைகளாக நின்று வென்றாடிய ஆளுமை. அவரின் இழப்பில் மொத்த தமிழகமும் மனம் கசிந்தது. மனோரமா பற்றி அறியாத பல தகவல்களை நம்முடன் பகிர்கிறார், கவிஞர் கண்ணதாசன் கம்பெனியில் புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்தவரும், மனோரமா தன் உடன்பிறவா அண்ணனாகக் கொண்டிருந்தவருமான வீரய்யா...

1957-ம் வருஷம் திருச்சியில் மனோரமாவின் நாடகத்தில் அவருடைய நடிப்பு, வசன உச்சரிப்பை எல்லாம் பார்த்து, ‘மெட்ராஸ் வந்தா என்னைப் பாரும்மா... சினிமாவில் வாய்ப்பு தர்றேன்’ என்றார் கவிஞர் கண்ணதாசன். இடையில் மனோரமாவை நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், தன் நாடகக் கம்பெனியில் நடிப்பதற்காக சென்னை அழைத்து வர, கண்ணதாசன் தன் தயாரிப்பான ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் மனோரமாவுக்கு வாய்ப்பளித்தார்.

‘மாலையிட்ட மங்கை’ படத்தில் கதாநாயகனாக டி.ஆர்.மகாலிங்கமும், கதாநாயகிகளாக பண்டரி பாய், மைனாவதியும் நடிக்க, நகைச்சுவை வேடத்துக்கு காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஜோடியாக மனோரமா. ‘எனக்கு கதாநாயகி வேஷம் தான் வேணும்’ என்று சொன்ன மனோரமாவை, ‘உனக்கு நகைச்சுவை வேஷம் சரியா இருக்கும்’ என்று சம்மதிக்க வைத்தார் கண்ணதாசன். 

மனோரமாவின் முதல் ஸீனில், நடிப்பு வந்தால் வசனம் வரவில்லை, வசனம் வந்தால் நடிப்பு வரவில்லை. 10 டேக்குக்கு மேல் போனதும், டைரக்டர் ஜி.ஆர்.நாதன், `மனோரமா வேண்டாம்' என்றார் கவிஞரிடம்! கவிஞரின் ஏற்பாட்டில், நானும் ஓர் உதவி இயக்குநரும் மனோரமா வீட்டுக்கே சென்று பயிற்சி கொடுத்தோம். மறுநாள் ஒரே டேக்கில் அசத்தி கைதட்டல் வாங்கினார் மனோரமா. இதுவரை யாருக்கும் தெரி யாத விஷயம் இது.

‘அண்ணே, ஒருவேளை நான் கதாநாயகியா நடிச்சிருந்தா, 10 வருஷத்துல காணாம போயிருப்பேன். நான் நடிகையானதுக்கும் நீங்கதான் காரணம், அதையும் மறக்க மாட்டேண்ணே...’ என்று 1,500 படங்கள் நடித்த பின்னரும் நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார். என்னையும் என் மனைவியையும், ‘அண்ணே, அண்ணி’ என்று வாய்நிறையக் கூப்பிடுவார். எனக்கே தெரியாமல் என் மனைவி பெயரில் இப்போது நாங்கள் வசிக்கும் ஃபிளாட்டை வாங்கி வைத்திருந்து, எங்களுக்கு வீடு தேவைப்பட்ட நேரத்தில் கொடுத்து உதவினார்.

Chandran Veerasamy

Leave a comment

Comment