TamilsGuide

44 ஆண்டுகளாகியும் இன்னும் இளமை ஊஞ்சலாடுகிறது

அந்தப் படத்துக்கு வேறு இரண்டு நடிகர்களைத்தான் முதலில் ஒப்பந்தம் செய்வதாக இருந்தது. ஆனால் கமலும் ரஜினியும் போடலாம்; பிரமாதமாக இருக்கும் என்று உதவி இயக்குநர்கள் சொன்னார்கள். ‘

வேணாம்’ என்று இயக்குநர்கள் மறுத்துவிட்டார். பின்னர் ஒருவழியாக சமாதானமாகி கமலையும் ரஜினியும் நடிக்கச் செய்தார். படமெடுத்தார்.

மிகப்பிரமாண்டமான வெற்றியைத் தந்தது அந்தப் படம். அந்த உதவி இயக்குநர்கள், இன்றைய இயக்குநர்களும் நடிகர்களுமான பி.வாசு, சந்தான பாரதி. ‘கமல் ரஜினி வேண்டாம்’ என்று சொன்ன இயக்குநர்... ஸ்ரீதர். வெற்றிகரமாக ஓடிய அந்தப் படம்... ஆமாம்... ‘இளமை ஊஞ்சலாடுகிறது’.    

ஸ்ரீதர் - எம்.எஸ்.விஸ்வநான் கூட்டணி, பல படங்களில் இணைந்திருந்தது. அதில், பெரும்பாலான பாடல்கள் வெற்றி பெற்றன. இருப்பினும், அப்போது முன்னணி இசையமைப்பாளராக இருந்த, இளையராஜாவுடன் கூட்டணி வைத்தார்.படத்தின் முக்கிய கருவே, நட்பும், தியாகமும் தான்.

ரஜினி - கமல் இருவருக்கும் சமமான கதாபாத்திரங்கள்.பணக்காரர் ரஜினியின் நிறுவனத்தில் பணிபுரிபவர், கமல். ஆனாலும், இருவரும் நண்பர்கள். அதே போன்றே, கல்லுாரி மாணவியான, ஸ்ரீப்ரியாவும், இளம் விதவையான, ஜெயசித்ராவும் தோழியர். இந்த நான்கு பேருக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான்,திரைக்கதை.

இப்படம், 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. சிறந்த திரைப்படத்திற்கான, தமிழக அரசின் விருது வென்றது. தெலுங்கில், வயசு பிலிசின்டி என்றும், ஹிந்தியில், தில் இ நடான் என்ற பெயரிலும், ரீமேக் செய்யப்பட்டது. 

’நல்லாருக்கு போங்க... இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்போ...’ என்று வயதானவர்களைக் கேலியும் கிண்டலுமாய்க் கேட்பார்கள். ஆனால் மனம், காதல், உடல், உணர்ச்சி, நட்பு, சபலம், சந்தேகம், நம்பிக்கை என வைத்துக்கொண்டு இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் விளையாடியிருப்பார் இயக்குநர் ஸ்ரீதர். நடிப்பில் முன்னேறிக் கொண்டே வந்தார் கமல். எனவே அவரின் நடிப்புப் பசிக்கு தீனி போட்டார் ஸ்ரீதர். 

ஸ்டைலில் அதகளம் பண்ணிக்கொண்டே இருந்தார் ரஜினி. ஆகவே அவருக்காகவே களம் அமைத்துக் கொடுத்தார் இயக்குநர். எந்தக் கேரக்டராக இருந்தாலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் ஸ்ரீப்ரியா. அதேபோல்தான் ஜெயசித்ராவும். இந்த இருவருக்குமே மிக அழகிய கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொடுத்தார் ஸ்ரீதர்.

படத்தில் வில்லன் கிடையாது. ஆகவே பழிவாங்கல், ரத்தக்களறிக்கெல்லாம் வேலையே இல்லை. சம்பவங்களும் சூழ்நிலைகளும்தான் வில்லன். காமெடிக்கு தனி டிராக்கெல்லாம் போடவில்லை. படத்தினூடே, காட்சிகள் வாயிலாகவே ஆங்காங்கே சிரிக்கவும் ரசிக்கவும் ரசித்துச் சிரிக்கவும் வைக்கிற காமெடிகளை மட்டுமே மிகையில்லாமல் பயன்படுத்தியிருப்பார்.

’கல்யாணப் பரிசு’, ’காதலிக்க நேரமில்லை’, ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்று அந்தக் காலத்தில் படமெடுத்தவர். ’உரிமைக்குரல்’, ’மீனவநண்பன்’ என்று எம்ஜிஆரின் கடைசிகால திரைப்படங்களை ஹிட்டாக்கியவர் என்று மட்டும் அறிந்துவைத்திருந்த இளம் ரசிகர்களுக்கு, ஸ்ரீதரும் ஸ்ரீதரின் கதை சொல்லும் பாணியும் தெரியவந்ததற்கு, இந்த ’இளமை ஊஞ்சாலாடுகிறது’தான் அந்தக் காலகட்டத்தில் பாலமிட்டது.         ஹோட்டலில் பர்ஸை தொலைத்துவிட்டு கமல் செய்யும் கற்பனைக் காட்சி, இப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜெயராம் பாடிய பாடல். இடம் பெற்ற படம் இளமை ஊஞ்சலாடுகிறது எனும் ரேடியோ அறிவிப்பு, ஸ்ரீப்ரியா வீட்டுக்கு போன் செய்து ‘இச் இச் இச்...’ என்கிற சங்கேத முத்த பாஷை, கமலுக்கும் ஜெயசித்ராவுக்குமான ’கிண்ணத்தில் தேன் வடித்து’ பாடல், காரின் ஸ்டெப்னியை கமல் மாட்டும் போது, டேப்ரிகார்டரில் ‘ஒரேநாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ பாடலை ஸ்ரீப்ரியா ஒலிபரப்பச் செய்வார். உடனே கமல் அதை ஆஃப் செய்வார். மீண்டும் ஸ்ரீப்ரியா ஆன் செய்வார். மீண்டும் ஆஃப் செய்யும் கமல்... அங்கே அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிற ரஜினி. தியேட்டரே ஆர்ப்பரிக்கும் அற்புதக் காட்சி அது. 

நிவாஸ் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு.

‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா’ பாடலையும் ‘தண்ணி கருத்திருச்சு’ பாடலையும் அப்போது பாடாத மேடைக் கச்சேரிகளே இல்லை. அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கித் தந்திருப்பார் இளையராஜா. கவிஞர் வாலி அத்தனைப் பாடல்களையும் இளமை மாறாமல் எழுதியிருந்தார்.  சினிமாவுக்காக, கதைக்காக, டிராமிட்டாக, சென்டிமெண்டாக எவரையும் குற்றவாளியாக்காமல், சந்தர்ப்பங்கள், சபலங்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் மீது குற்றம் சுமத்தி, எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்பும் கொடுத்திருப்பதில், ஸ்ரீதரின் தனி முத்திரை பளிச்சிட்டிருக்கும்.

1978ல் வெளியான இந்தப் படம், ஸ்ரீதருக்கும் கமலுக்கும் ரஜினிக்கும் கமல் ரஜினிக்கும் மறக்க முடியாத வெற்றியாக அமைந்தது. அப்படியே ரசிகர்களுக்கும் கிடைத்தது அற்புதப் படம்!

1978ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி வெளியானது ‘இளமை ஊஞ்சலாடுகிறது’. 

இன்றைக்கும் இளமை மாறாத கதையாகவும் திரைக்கதையாகவும் அமைந்திருப்பது, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ ஸ்பெஷல்! 

இந்து தமிழ் திசை!
வி. ராம்ஜி  !

Leave a comment

Comment