TamilsGuide

அடிக்கடி இங்க வராதே… கங்கை அமரனை விரட்டிய கலைஞர் - காரணம் எம்.ஜி.ஆர்!

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் தனது சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் சமீபத்திய பேட்டியில் கலைஞர் தன்னை அடிக்கடி வீட்டுக்கு வராதே என்று கூறியதாகவும் அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 1979-ம் ஆண்டு வெளியான கரை கடந்த குறத்தி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளாக அறிமுகமானவர் கங்கை அமரன். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த அவர், 1982-ம் ஆண்டு வெளியாக கோழி கூவுது என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன் கோவில் காளை, தெம்மாங்கு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள கங்கை அமரன், தமிழில் இதுவரை 19 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக கடந்த 1997-ம் ஆண்டு வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் படத்தை இயக்கியிருந்தார்.

இவர் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றதோடு ஒரு வருடத்திற்கு மேலாக பல திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலம் நடிகை கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இசையமைப்பாளர், இயக்குனர் மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பாடகர் டப்பிங் கலைஞர் என தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட கலைஞர்களில் கங்கை அமரன் முக்கியமானர்.

இவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து சமீபத்திய பேட்டியில் கூறுகையில், நாங்கள் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே பாட்டு எழுதி இசையை கம்போஸ் செய்வோம். அப்போது தான் பஞ்சு அருணாச்சலாம் அண்ணன் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த வாய்ப்பு குறித்து அண்ணன் இளையராஜா எங்களுக்கு சொல்லவே இல்லை. கம்போசிங் போகும்போது தான் எங்களுக்கே தெரியும்.

அன்னக்கிளி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நான் எழுதி அண்ணன் இசையமைத்தது. இப்படி நான் எழுதி வைத்த பல பாடல்களை அண்ணன் இசையமைத்து பல படங்களுக்கு கொடுத்துள்ளார். இன்றைக்கு நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் பஞ்சு அண்ணன் தான். அதேபோல் நான் கண்ணதாசனிடம் உதவியாளராக பணியாற்றியபோது நான் எந்த திருத்தம் சொன்னாலும் கண்ணதாசன் அப்படியே ஏற்றுக்கொள்வார். அதேபோல் சிவாஜி அப்பாவும் எங்களை நல்ல பண்றீங்கடா மகன்களே என்று பாராட்டுவார். இதெல்லாம் கடவுள் எங்களுக்கு கொடுத்தது.

அதேபோல் எம்.ஜி.ஆர் அருகில் அமர்ந்து அவருடன் பேசும் வாய்ப்பு கூட கிடைத்தது. இதெல்லாம் என் பாக்கியம். கலைஞருடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் இருக்கிறது. ஆனால் கலைஞர் ஒருமுறை என்னை அடிக்கடி வீட்டுக்கு வராதே என்று சொன்னார். எம்.ஜி.ஆர் உன் மீது அதிக பாசம் காட்டுகிறார். அதனால் நீ இங்கு வருவது சரியாக இருக்காது என்று சொன்னார்.

அதற்கு நான் நீங்கள் வெளியில் எப்படி இருந்தாலும் இருவரும் உள்ளுக்குள் எப்படி இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். உங்களின் நட்பு பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று சொன்னேன். அதேபோல் ஒரு பெண் ஆசிரியைக்கு டிரான்ஸ்பர் வேண்டும் என்று கேட்டபோது அமைச்சரின் பி.ஏ 2.5 லட்சம் லஞ்சம் கேட்டார். இதை உடனடியாக கலைஞரிடம் சொன்னபோது என் கண்முன்னே அவரை கூப்பிட்டு கண்டித்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழச்சி கயல்விழி

Leave a comment

Comment