TamilsGuide

ஆயிரம் மலர்களே மலருங்கள்

நினைவில் நிறைந்திருக்கும் "நிறம் மாறாத பூக்கள்" படத்தில் ஒலித்த பாடல்!
 காற்றில் கலந்த இசை...
இரண்டு காதல் ஜோடிகள்; காதலில் பிரிவு; புதிய உறவு என்று செல்லும் இப்படத்தில் நுட்பமான உணர்விழை பின்னல்களை கொண்ட பாடல்களை உருவாக்கியிருந்தார் இளையராஜா.
இழந்த காதலின் வசந்தகால நிலப்பரப்புக்கு சென்று, வருடிச் செல்லும் காற்றில் மனத்தின் ரணங்களை காயவைத்துக் கொள்ளும் உணர்வை ஏற்படுத்தும் பாடல்களில் ஒன்று ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’. ஜென்ஸி, எஸ்.பி. ஷைலஜா, மலேசியா வாசுதேவன் என்று மூன்று அற்புதக் குரல்களின் சங்கமம் இப்பாடல்.

வெறும் இசை கருவிகளின் தொகுப்பாக மட்டும் இல்லாமல், மனித உணர்வுகளின் மெல்லிழைகளால் இழைக்கப்பட்ட பாடல் இது. கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரலாக ஜென்ஸியின் ஹம்மிங், சருகுகளை அள்ளிக்கொண்டு வரும் காற்றை போல மனதின் பல்வேறு உணர்வுகளை திரட்டிக்கொண்டே பரவிச் செல்லும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் ஏதுமற்ற, சிறிய பூச்செடிகள் நிறைந்த பரந்த நிலத்தில் நம்மை அள்ளிச் சென்று நிறுத்திவிடும் அந்த ஹம்மிங். முற்றிலும் சோகமயமாக்கிவிடாமல், கைவிட்டுப்போன காதலின் இனிமையான தருணங்களும், துயரம் தோய்ந்த நிகழ்காலமும் இனம் பிரிக்க முடியாதபடி கலக்கும் சுகானுபவத்தை இசைக் குறிப்புகளால் எழுதியிருப்பார் இளையராஜா.
’மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ’ எனும் கண்ணதாசனின் வரிகள், சோக நாடகத்தின் ஆன்மாவை வலியுடன் பதிவுசெய்திருக்கும். பிரிவின் வலிகளால் முதிர்ச்சியடைந்திருக்கும் இளம் மனதின் வெளிப்பாடாக உணர்வுபூர்வமாக பாடியிருப்பார் ஜென்ஸி. ‘என் பாட்டும் உன் பாட்டும்’ எனும் வார்த்தைகளை தொடர்ந்து, மிகக் குறுகிய இடைவெளிக்கு பின் ‘ஒன்றல்லவோ’ என்று ஜென்ஸி பாடும்போது அவரது குரலில் சிறிய தேம்பல் தொனிக்கும். பாடலின் இரண்டாவது சரணத்தை தொடரும் எஸ்.பி. ஷைலஜா தனது வழக்கமான துல்லியத்துடன் பாடியிருப்பார். மேகத்தை நோக்கி எறியப்பட்ட குரலோ என்று தோன்றும்.
‘எழுதிச் செல்லும் விதியின் கைகள்’ எனும் கவிதை வரியில், வார்த்தைகளுக்கு வெளியே ஒரு புனைவுச் சித்திரத்தை வரைந்திருப்பார் கண்ணதாசன்.
தொடர் ஓட்டத்தை போல், ஷைலஜாவிடமிருந்து சோகத்தை வாங்கிக்கொண்டு பாடலை தொடர்வார் மலேசியா வாசுதேவன். இசையின் முடிவில் ஒலிக்கும் கிட்டார், ஆணின் மனதுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் துயரம் வெளியேற தவிப்பதை பிரதியெடுத்திருக்கும். ‘மலையின் மீது ரதி உலாவும் நேரமே’ எனும் வார்த்தைகள் உருவாக்கும் கற்பனை வார்த்தையில் அடங்காதது. பூமிக்கும் மேகத்துக்கும் இடையில், அந்தரத்தில், வானுலகத்தின் தேவதை நடந்து செல்வதாக மங்கலான சித்திரம் தோன்றி மறையும். காதல் அனுபவமே இல்லாதவர்கள் கேட்டால்கூட கண்களின் ஓரம் நீர் துளிர்க்க வைக்கும் பாடல்!
தினத்தந்தி இணையதளம்.
ட்யூன் சொல்ல சொல்ல.. பல்லவி சரணங்களை பத்தே நிமிடத்தில் சொல்லி பாடலை முடித்து கொடுத்தார் கவியரசர்.. இது இசைஞானி இளையராஜா சொன்ன தகவல்.
பரவசம் விரிக்கும் பாடல்...
கண்ணதாசன் வரி அழகா?
இளையராஜா இசை அழகா?
கண்ணை மூடி கேட்டு பாருங்கள்..
மலேசியா மலைக்கு அழைத்து செல்வார்
ஜென்சி வானில் பறக்க வைப்பார்...!
நாமும் இசையோடு சேர்ந்து பறப்போம்!

Leave a comment

Comment