TamilsGuide

உரிமைக்குரல் நினைவுகள்  ஒலித்தன

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் 1977 - ஆம் ஆண்டு 'பொம்மை' சினிமா இதழுக்காக நடிகை லதாவுக்கு பேட்டி கொடுத்தபோது எடுத்த படமாம் இது !
எம்.ஜி.ஆர் - லதா இணைந்திருந்த இந்த படத்தை பார்த்தபோது உள்ளத்தில் சில 'உரிமைக்குரல்' நினைவுகள்  ஒலித்தன.
எம்.ஜி.ஆரை வைத்து படமே இயக்காத ஸ்ரீதர், முதன்முதலாக 'உரிமைக்குரல்' படத்தில் ஒன்றாக  இணைகிறார். படப் பிடிப்பு  தொடங்குவதற்கு முன்பாக, எம்.ஜி.ஆரை அவரது தோட்டத்தில் சந்தித்து படம் சம்பந்தமான விஷயங்களைப்  பேசி இருக்கிறார்.
அந்த சமயத்தில் ஸ்ரீதர்  பொருளாதார ரீதியாக சிறிது சிரமத்தில் இருந்திருக்கிறார். ஆனால் எம்ஜிஆரிடம் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. 
பேச வேண்டிய  விஷயங்களைப் பேசி விட்டு விடைபெற எழுந்தார் ஸ்ரீதர்.
“'ஒரு நிமிஷம் உட்காருங்கள்” என்று எம்.ஜி.ஆர். சொல்ல, என்னவோ ஏதோ என தயங்கியபடி அமர்ந்தார் ஸ்ரீதர்.
எம்.ஜி. ஆர். தன் செயலாளரை அழைத்து, உடனடியாக ஒரு கடிதம் எழுதச்  சொல்லி, அதில் தன் கையெழுத்தையும்  போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்திருக்கிறார். படபடப்புடன் அதை படித்துப் பார்க்கிறார் ஸ்ரீதர்.
“நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புதல் அளிக்கிறேன். அவர் படத்துக்கு முன்னுரிமை தந்து மூன்று மாதங்களுக்குள் முடித்துத்தர சம்மதிக்கிறேன்” என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர் !
உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த  குரலில், “நீங்கள் வாய்மொழியாகச் சொன்னது போதாதா ? இப்படி எழுதி கையெழுத்தெல்லாம் போட்டுக் கொடுக்க வேண்டுமா ?” என்று  ஸ்ரீதர் கேட்க, எம்.ஜி.ஆர். சொன்னார். “இது உங்களுக்காக அல்ல. பணம் கொடுக்கும்  பைனான்சியர்களுக்காக! 
இது பெரிய பட்ஜெட் படம். பணப் பற்றாக்குறை ஏற்பட்டு  நீங்கள் கஷ்டப்படக் கூடாது. இந்தக் கடிதத்தைக் காட்டினால்,  விநியோகஸ்தர்களும் பைனான்சியர்களும் உடனடியாக உங்களுக்கு பணம் கொடுக்க முன்வருவார்கள். அதற்காகத்தான் இந்த கடிதம்” என்றார் எம்.ஜி.ஆர். 
இதைக் கேட்டவுடன்  கண் கலங்கி விட்டார் ஸ்ரீதர்.
ஆம். எம்.ஜி.ஆர். சொன்னது போலவே, எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததுமே  விநியோகஸ்தர்களும், பைனான்சியர்களும் ஸ்ரீதர் வீடு தேடி வந்து விட்டார்களாம். 'உரிமைக்குரல்' படம் தயாராவதற்கு முன்பே தேவையான பணம் உடனடியாகக் கிடைத்து விட்டது.
எம்.ஜி.ஆரின் உயர்ந்த உள்ளத்தை  நினைக்கும்போது, 'உரிமைக்குரல்' படத்தில் வரும் “ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் ” பாடலில் வரும் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன.
“உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட 
இருளில் பிரிகின்றது 
வெளிச்சம் வரும் போது 
உடலை நிழல்தேடி 
இணைய வருகின்றது 
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம் 
நாளை அந்த வேளை 
வந்து என்னை சேரலாம்”
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.”

இந்த குறளுக்கு உரை எழுதச் சொன்னால் ஒரு வார்த்தை கூட எழுதத் தெரியாது எம்.ஜி.ஆருக்கு !
ஆனால் வள்ளுவன் சொன்ன அந்த வார்த்தைகளின் வழியில் வாழ்ந்து காட்டுவதைத் தவிர வேறொன்றும் அவருக்கு தெரியாது !
அதை யார் எம்.ஜி.ஆருக்கு கற்றுக் கொடுத்தார்கள் என நமக்கு தெரியாது !

John Durai Asir Chelliah

Leave a comment

Comment