TamilsGuide

யுகக் கலைஞன் — நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து

உங்கள் ‘பராசக்தி‘ வெளிவந்து ஓராண்டுக்குப்
பிறகுதான் நான் பிறக்கிறேன்.
நீங்கள் விருட்சமாய் வளர வளர
நான் விதையாய் முளைத்திருக்கிறேன்.
உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான்
கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன
கடலைகளைத் தின்னாமல்
திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன்.
‘மனோகரா‘ பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில்
சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து
சங்கிலிக்குப் பதிலாக
தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து
இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு
புளிய மரத்தைப் புருஷோத்தமனாக்கி
என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா…?
‘வீரபாண்டிய கட்டபொம்மன்‘  பார்த்துவிட்டு
சோளத்தட்டையில் வாள் செய்து
என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா…?

உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
இந்தியா சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதி முக்கிய பங்கிருக்கிறது.
நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள்
உலகத் தரம் பெற்றன !
—கவியரசு வைரமுத்து

Leave a comment

Comment