TamilsGuide

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்லத்துரை கிருபாகரன் ஆகிய கைதிகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் மதன்சேகருக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கிருபாகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2022 ஜூலை 20 ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment