TamilsGuide

ஒரே ஒரு காட்சிக்காக 100 யானைகளைக் களமிறக்கி பிரம்மாண்டம் காட்டிய அந்தக் காலத்து ஷங்கர்

பிரம்மாண்டப் படங்கள் என்றால் இன்று டைரக்டர் ஷங்கரின் படங்களைப் புகழ்ந்து தள்ளுகிறோம் அல்லவா. ஆனால் 1950-களிலேயே பல பிரம்மாண்டப் படங்களை எடுத்து தமிழ் சினிமா உலகை உலகத் தரத்திற்கு அழைத்துச் சென்றவர் எஸ்.எஸ்.வாசன். மோஷன் பிக்சர்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஸ்டுடியோ தீ விபத்தால் பாதிக்கப்பட்டபோது அதை ஏலத்தில் வாங்கி ஜெமினி ஸ்டுடியோ எனப் பெயரிடப்பட்டு பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களை எடுத்தவர் எஸ்.எஸ்.வாசன்.

அதற்கு ஓர் தகுந்த உதாரணம் என்றால் அவர் தயாரிப்பில் வெளிவந்த அவ்வையார் படத்தின் ஒரு காட்சிக்காக 100 யானைகளையே களம் இறக்கி அக்காட்சியை எடுத்து அசர வைத்திருப்பார். தமிழ் சினிமாவின் அந்தக் காலத்து பிரம்மாண்டமான படமாக இன்றும் கருதப்படும் சந்திரலேகா போன்ற படங்களைக் எஸ்.எஸ்.வாசன் ஔவையார் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஒளவையார் கதையிலும் பிரம்மாண்டத்தைக் கொண்டு வர விரும்பிய வாசன், அதை இயக்குநர் கொத்தமங்கலம் சுப்புவிடம் தெரிவிக்க அதற்கேற்றார் போல கதையில் ஒரு காட்சியும் இருந்தது. திமிர் பிடித்த மூன்று அரசர்கள் ஒளவையாருக்கு தொல்லை கொடுக்க அவர்களை சமாளிப்பதற்கு ஒளவையார் கோவிலுக்கு சென்று விநாயகரிடம் ஒரு கும்பிடு போட்டு கோரிக்கை வைக்கும் ஒரு காட்சி இருந்தது. அதை தனது ஸ்டைலுக்கு திரைக்கதையில் மாற்றி ஒளவையாரின் கோரிக்கையை ஏற்கும் விநாயகர் 100 யானைக் கூட்டத்தை அனுப்பி அந்த மன்னர்களில் ஒருவரது கோட்டையை இடிக்க அனுப்பி வைப்பது என தீர்மானித்தார்கள்.

சரி ஒரே நேரத்தில் 100 யானைக்கு எங்கே போவது? இக்காலம் போல் கிராபிக்ஸ் கிடையாது. எனவே படக்குழுவினர் 100 யானைகளை தேடி அலைந்த போது, அதிர்ஷ்டவசமாக ஒரு தகவல் அந்தக் குழுவுக்கு கிடைத்தது. கர்நாடகாவின் கூர்க்கில் சும்மா திரிந்து கிடந்த 100 யானைகளை சென்னை துறைமுகம் வழியாக கப்பலில் அந்தமானுக்கு யானைகள் கூட்டமாக கொண்டு செல்லப்படுவதாக வந்த செய்திதான் அது.

பல்வேறுகட்ட அனுமதிகள் முயற்சிகளுக்குப் பின் 100 யானைகளை ஸ்டூடியோவுக்கு கொண்டு வந்து கோட்டையை செட் போட்டு அதை யானைகள் மோதி உடைப்பது போல பத்து நாட்கள் தொடர்ந்து படம் பிடித்தார். அந்த 100 யானையை பத்து நாட்கள் பராமரித்த செலவில் மட்டும் இன்று மூன்று படங்கள் எடுத்துவிடலாம்.

அதிலும் திருப்தி அடையாத வாசன் மீண்டும் ஒரு பிரம்மாண்டத்தைக் காட்ட விரும்பினார். அதன்படி பண்டைத் தமிழ் மன்னன் பாரி ஒளவையாருக்கு பிரம்மாண்ட வரவேற்பை அளிப்பதாக எழுதப்பட்டு ரூ.1.5 லட்சம் செலவில் ஒரு முழு தெரு செட் போடப்பட்டது. 10,000 இளைய கலைஞர்கள் மற்றும் பல வகையான நாட்டுப்புற நடனங்கள் அந்த ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டன. மேற்கண்ட காட்சிகள் திரைப்படத்தை உயிர்ப்பித்தது.

இப்படியாக தனது ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டங்களின் நாயகனாகவே ஜொலித்தார் எஸ்.எஸ்.வாசன்.

Leave a comment

Comment