TamilsGuide

கனமழையால் வெள்ளத்தில் முழ்கிய கிண்ணியா - தடைப்பட்ட தரைவழி போக்குவரத்து 

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பாறு கிராம சேவகர் பிரிவில் காணப்படும் கிராமத்தின் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அதன் ஊடான தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நேற்று இரவு(2023.12.29) முதல் இந்த நிலைமை காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு அப்பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

சோளவெட்டுவான், காரவெட்டுவான்,தகரவெட்டுவான்,மயிலப்பன் சேனை உள்ளிட்ட அதனை அண்டிய கிராமங்களுக்கு செல்லும் வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வல்லத்தில் பயணம் செய்து உரிய கிராமத்தை அப்பகுதி மக்கள் சென்றடைகின்றனர்.

இவ் வீதியை தவிர மாற்று வீதி இன்மையால் மக்கள் இவ் வெள்ள நீரை கடந்தே செல்ல வேண்டியுள்ளதுடன் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டு தங்களின் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் அவர்களின் வாழ்வாதாரமாக தோட்டச் செய்கை காணப்படுகிறது.

கனமழை உள்ளிட்ட காரணத்தாலும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள், மன்னம்பிட்டிய பகுதியில் உள்ள வான் கதவுகள் திறக்கப்பட்டதால் மகாவலி கங்கையின் நீரேந்து பகுதியின் விளைவினால் வெள்ளநீரில் மூழ்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இப் பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாடம் கூலித் தொழிலையே செய்து வருவதாகவும் பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

வருடா வருடம் இந்த நிலை ஏற்படுவதனால் நிரந்தர தீர்வாக வெள்ள நீரில் மூழ்காத வீதிகளை புனரமைப்பு தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
 

Leave a comment

Comment