TamilsGuide

மற்றொரு ஆய்வுக் கப்பலை கொழும்புக்கு அனுப்புகிறது சீனா

சீனாவின் சி யான் 6 ஆராய்ச்சி கப்பல் தனது ஆராய்ச்சிகளை முடித்துக் கொண்டு டிசம்பர் 2ம் திகதி சிங்கப்பூர் திரும்பிய பின்னர் இலங்கையின் துறைமுகத்திலும் மாலைதீவிலும் தனது மற்றுமொரு கப்பல் தரித்து நிற்பதற்கு அனுமதிக்குமாறு சீனா கொழும்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  
2024 ஜனவரி ஐந்தாம் திகதி முதல் மே மாதம் வரை தனது கப்பல் தென்இந்திய சமுத்திரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

இந்தியா ஏற்கனவே தனது எதிர்ப்பை இலங்கைக்கும் மாலைதீவிற்கும் தெரிவித்துள்ளதுடன் சீன கப்பல் இனிமேல் இந்து சமுத்திரத்தில் இராணுவ நோக்கங்களிற்காக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் தென்சீனாவின் சியாமென் கரையோர பகுதியில் தரித்து நிற்கின்றது. இந்த நாடுகளிடம் அனுமதியை பெற்ற பின்னர் மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும்.

2016 தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் நவீன கண்காணிப்பு ஆராய்ச்சி சாதனங்களை தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கிய சீனாவின் சியான் 6 கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திலும் தென்இந்திய சமுத்திரத்திலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின்னர் நவம்பர் 20 ம் திகதி மலாக்க நீரிணையிலிருந்து வெளியேறியது.

கொழும்பு துறைமுகத்திற்குள் ஒக்டோபர் 25 ம் திகதி நுழைவதற்கு முன்னர் சென்னையிலிருந்து 500 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் காணப்பட்டது.

சீனாவின் ஏவுகணை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பல்களிற்கு இலங்கை அனுமதி வழங்குவது குறித்தும் , தற்போது மாலைதீவில் உள்ள சீனா சார்பு அரசாங்கம் குறித்தும் இந்தியா கரிசனைகளை கொண்டுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த கப்பல்கள் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக இந்தியா கரிசனை கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்திய பிரதமர் இது குறித்த தனது கரிசனைகளை பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் மூலோபாய கரிசனைகளிற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சீன கடற்படை மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் அணுவாயுத நீர்மூழ்கிகள் ஏவுகணைகளை அழிக்கும் நாசகாரிகள் போன்றவற்றை பெற்றுகொண்டு தனது கடல்சார் வளங்களை வேகமாக அதிகரித்து செய்து வருகின்றது.

கம்போடியா முதல் செங்கடல் வரை பல கடற்படை தளங்களை அமைப்பதன் மூலம் சீனா இந்து சமுத்திரத்தில் தனது காலடியை விரிவுபடுத்துகின்றது. 
 

Leave a comment

Comment