TamilsGuide

காலாவதியாகும் சட்டதிருத்தம் - கடல் போல் குவியும் பாலியல் புகார்கள்

பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான நியூயார்க்கில், கடந்த 2022 நவம்பர் மாதம் பாலியல் தாக்குதல் குறித்த புகாரளிப்பு சட்டங்களில் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் (Kathleen Hochul) சில மாற்றங்களை கொண்டு வந்தார்.

பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்கள், அது குறித்த புகாரையும், வழக்கையும், 3 வருட காலத்திற்குள் பதிவு செய்து விட வேண்டும் என அங்கு சட்டம் இருந்தது.

2019ல் இந்த காலக்கெடு முறை நீக்கப்பட்டாலும், அது சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தி வந்தது.

எனவே, 2022ல் "அடல்ட் சர்வைவர்ஸ் ஆக்ட்" (Adult Survivors Act) எனும் பெயரில் கவர்னர் ஹோசல் கொண்டு வந்த இந்த சட்ட மாற்றத்தின்படி ஒரு ஆண்/பெண், தங்கள் வாழ்வின் முந்தைய காலகட்டத்தில் எப்பொழுதோ பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தால் கூட தற்போது அது குறித்து புகார் அளிக்கலாம் என வழிவகை செய்யப்பட்டது.

ஆனால், இந்த சட்ட மாற்றம் ஒரு வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் கொண்டு வரப்பட்டதால், அது இம்மாதத்துடன் காலாவதியாகிறது.

இதனையடுத்து, இந்த ஒரு வருட கால தொடக்கத்தில் பெரிய அளவு புகார்கள் வரவில்லை. ஆனால், விரைவில் சட்ட திருத்தம் காலாவதியாக போவதால் சமீப சில நாட்களாக பலர் தாமாக முன்வந்து புகார் அளித்து வழக்கு பதிவு செய்கின்றனர். இதுவரை 2500 பேர் புகார் அளித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, பல பிரபலங்களுக்கு எதிராக புகார்கள் வந்துள்ளது அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்க பாடகர் டிட்டி (ஷான் கோம்ப்ஸ்), முன்னாள் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, பாடகரும் நடிகருமான ஜேமி ஃபாக்ஸ், பாடகர் ஆக்ஸ்ல் ரோஸ் உட்பட பல பிரபலங்கள் இக்குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment