TamilsGuide

இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா?

ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இலங்கையில்  உண்மையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக, தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று வனவிலங்கு பாதுகாவலர்களும் பொலிஸாரும் இணைந்து எமது துயிலும் வீரர்களுக்காக கட்டப்பட்ட அந்த நினைவு தூபியினை உடைத்து, மிகவும் அராஜகமான ஒரு செயலை செய்துள்ளனர்.

உண்மையில் மனது வலிக்கின்றது.  அதுமட்டுமல்லாது”சந்திவெளி பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பதற்காக  எமது அணி அங்கு சென்றிருந்தது.  எனினும் குறித்த நிகழ்வினை நடத்துவதற்கு பொலிஸார்  இடம் தரவில்லை. இவ்வாறு இன்னமும் என் மீது அராஜகத்தினை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

இதை யார் கேட்பது? இதற்கான பதில் என்ன? முடிவு தான் என்ன?  எனவே மக்கள் ஒன்று கூட வேண்டும் மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும்.  இதற்காக வரும் 27 ஆம் திகதி நாங்கள் குறித்த பகுதியில் விளக்கேற்றவுள்ளேம்.

இதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த நாட்டில் வாழும் தமிழர்களாகிய எங்களுக்கு இவ்வாறான நெருக்கடியினையும் அச்சுறுத்தலையும்  மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

இதனை புலம்பெயர் தேசத்தில் வாழும் நமது உறவுகள் இதனை கண்டு கொள்ளாமல் இருக்காமல் இதற்காக சர்வதேச ரீதியாக உங்களது முயற்சிகளை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ” இவ்வாறு சி.நிதர்சன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment