TamilsGuide

கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு கொடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்

வட்டுக்கோட்டைப் பொலிஸார் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும், அவரது நண்பர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் சசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து அதிருப்தி தெரிவித்த அயல் வீட்டார் மீது குறித்த  நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.  இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், அன்றைய தினம் இரவு முறைப்பாடு அளித்த நபரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்  எழுப்பிய சத்தத்தை கேட்டு அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் அவரது மகள்  சம்பவ இடத்திற்கு வந்துள்ள வேளை அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாரைத்  தொடர்பு கொண்டு இது குறித்து தெரியப்படுத்திய போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை தாக்குதல் நடாத்திய நபர் தாங்கள் பொலிஸாருக்கு காசு கொடுத்ததாகவும் ஆகையால் அவர்கள் வரமாட்டார்கள் என்றும் கூறியதாகவும், இதனையடுத்து கொழும்பு பொலிஸாருக்கு (119) இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரியப்படுத்தியுள்ள நிலையில்,  வட்டுக்கோட்டை பொலிஸார் இரவு 11 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த கசிப்பு உற்பத்தியாளர் வீட்டில் பதுங்கி இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ள போதும் பொலிஸார் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் குறித்த நபர்களுடன் பொலிஸார் தொலைபேசியில் உரையாடியவாறு  இருந்துள்ளனர் எனவும்  அதிகாலை 3 மணியளவில் அந் நபர்களை பாதுகாப்பாக  பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் கருத்துத் தெரிவிக்கையில்”  இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் எனது மகள் மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் இதுவரை எம்மிடம் எந்தவிதமான விசாரணைகளும்  நடத்தப்படவில்லை. எங்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கவும் இல்லை. இன்றுவரை அந்த வீட்டில் கசிப்பு உற்பத்தி நடைப்பெற்றுக்கொண்டுதான் வருகின்றது.

எமது ஊருக்கு அருகே உள்ள கடை ஒன்றுக்கு பொலிஸாரின் முச்சக்கர வண்டி வரும். கசிப்பு உற்பத்தியாளர் அந்த இடத்தில் வைத்து பொலிஸாரை சந்தித்து காசு கொடுப்பார். உடனே பொலிஸாரின் முச்சக்கர வண்டி திரும்பிச் சென்றுவிடும். எங்களது ஊரில் எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கசிப்பு உற்பத்தியை தடுத்து நிறுத்தி எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்”   என அவர் தெரிவித்தார்.

அண்மையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மேலுமொரு சம்பவம் பதிவாகியுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment